தமிழ்நாட்டில் 2ஆவது இடத்திற்குதான் போட்டி: முதல்வர் மு.க.ஸ்டாலின்
டிரம்ப் இல்லாமல் சாத்தியமில்லை: சுனிதா வில்லியம்ஸ் மீட்பு குறித்து நாசா கருத்து!
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் உள்பட 4 பேரின் மீட்புப் பணிகள் அதிபர் டொனால்ட் டிரம்ப் இல்லாமல் சாத்தியமில்லை என நாசா புகழாரம் சூட்டியுள்ளது.
டிரம்ப் நிர்வாகத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்று இது எனவும் நாசா சுட்டிக்காட்டியுள்ளது.
சா்வதேச விண்வெளி நிலையத்தில் 286 நாள்கள் தங்கியிருந்த நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் உள்பட 4 விண்வெளி வீரா்களும் கடந்த 19ஆம் தேதி அதிகாலை 3.30 மணியளவில் (இந்திய நேரப்படி) பத்திரமாக பூமிக்குத் திரும்பினர்.
அமெரிக்காவின் போயிங் நிறுவனம் தயாரித்த ஸ்டாா்லைனா் விண்கலத்தில் நாசா விண்வெளி வீரா்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோா் ஆகிய இருவரும் கடந்த ஆண்டு ஜூன் 5-ம் தேதி சா்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்றனா்.
சா்வதேச விண்வெளி நிலையத்தில் 8 நாள்கள் ஆய்வை முடித்துவிட்டு இவா்கள் பூமி திரும்ப திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், ஸ்டாா்லைனா் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு, இவா்கள் பூமிக்கு உடனடியாகத் திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால், அவா்கள் தொடா்ந்து சா்வதேச விண்வெளி நிலையத்திலேயே தங்கியிருந்து, ஆய்வுகளை மேற்கொண்டனா்.
இந்த நிலையில், கடந்த 16-ஆம் தேதி அமெரிக்காவைச் சோ்ந்த விண்வெளி வீரா்கள் ஆனி மெக்லைன், நிகோல் அயா்ஸ், ஜப்பானைச் சோ்ந்த டகுயா ஒனிஷி, ரஷியாவைச் சோ்ந்த கிரீஸ் பெஸ்கோஸ் ஆகியோருடன் எலான் மஸ்கிற்குச் சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் சா்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்தது.
புதிய விண்வெளி வீரா்களிடம் பணிகளை ஒப்படைத்த பின்னா், அமெரிக்காவைச் சோ்ந்த சுனிதா வில்லியம்ஸ், வில்மோா், நிக் ஹேக் மற்றும் ரஷியாவைச் சோ்ந்த அலெக்ஸாண்டா் ஆகியோா் அங்கிருந்த டிராகன் விண்கலன் மூலம் பூமிக்குத் திரும்பினர்.
இந்நிலையில் இது குறித்து ஆங்கில ஊடகத்துக்கு பேட்டி அளித்த நாசாவின் செய்தித்தொடர்பாளர் பெத்தனி ஸ்டீவன்ஸ் தெரித்துள்ளதாவது,
''விண்வெளி வீரர்கள் பத்திரமாக மீட்கப்பட்டது டிரம்ப் நிர்வாகத்துக்கு கிடைத்த மிகப்வெற்றிகளில் ஒன்று. அதிபர் டிரம்ப் இல்லாமல் இது சாத்தியமில்லை. நாசாவின் அடுத்த நிர்வாகியாக பணியாற்ற ஜாரட் டெய்லர் ஐசக்மேனை அவர் தேர்வு செய்துள்ளார்.
அமெரிக்க மக்கள் ஒருகாலத்தில் அவரை வெளியேற்றினர். ஆனால், மீண்டும் டிரம்ப்பிற்கு அமெரிக்க மக்கள் பொறுப்புகளை வழங்கியுள்ளனர். தொழில் துறையில் அவர் எந்த அளவுக்கு கவனம் செலுத்துகிறார் என்பதை அவரின் நிர்வாகத்தின் மூலம் உணரலாம். தொழில்முனைவோரும் வணிக விண்வெளி வீரருமான ஜாரட் டெய்லரை அவர் பரிந்துரை செய்ததில் இருந்து அதனை அறியலாம்'' எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | உலகின் மூன்றாவது பொருளாதாரமாக இந்தியா! சர்வதேச நாணய நிதியம் தகவல்