ஆபரேஷன் பிரம்மா: மியான்மர் அதிகாரிகளிடம் நிவாரணப் பொருள்கள் ஒப்படைப்பு!
புது தில்லி: ஆபரேசன் பிரம்மா பெயரில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மருக்கு நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மியான்மரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ள மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் வெள்ளிக்கிழமை(மார்ச் 28) ஏற்பட்டது. மியான்மர் மட்டுமல்லாது தாய்லாந்து, வியட்நாம், சீனாவிலும் உணரப்பட்ட நில அதிர்வுகளால் மேற்கண்ட நாடுகளில் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. அப்பகுதிகளில் மீட்பு பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் பலத்த சேதத்தை சந்தித்துள்ள மியான்மருக்கு ‘ஆபரேசன் பிரம்மா’ என்கிற பெயரில் நிவாரணப் பொருள்கள் அனுப்பப்படுகின்றன. அந்த வகையில், இந்தியா சார்பில் 15 டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பப்பட்டுள்ளன.
உத்தரப் பிரதேச மாநிலம் ஹிண்டன் விமான நிலையத்தில் இருந்து இந்திய விமானப்படையின் (IAF C 130J) விமானத்தில் அனுப்பப்பட்ட நிவாரணப் பொருள்கள் மியான்மர் சென்றடைந்தன.
இந்த நிலையில், முதல் தொகுதியில் அனுப்பப்பட்டுள்ள பொருள்கள் அனைத்தையும் மியான்மரின் யாங்கோன் முதல்வர் யூ சோ தெய்னிடம் இந்திய தூதர் அபய் தாக்குர் முறையாக ஒப்படைத்தார் என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.