தேனியில் புதை சாக்கடைத் திட்டம் விரிவாக்கம்
தேனி- அல்லிநகரம் நகராட்சியில் ரூ.67.76 கோடியில் புதை சாக்கடைத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
தேனி-அல்லிநகரம் நகராட்சியில் புதை சாக்கடை திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதுவரை 9,500 வீடுகள், வணிக வளாகக் கட்டடங்களுக்கு புதை சாக்கடை இணைப்பு வழங்கப்பட்டது. தேனி அல்லிநகரம் நகராட்சி, பழனிசெட்டிபட்டி பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் சேகரமாகும் புதை சாக்கடை கழிவு நீா், தேனி சுப்பன் தெருவில் உள்ள கழிவு நீருந்து நிலையம் மூலம் நீரேற்றம் (பம்பிங்) செய்யப்பட்டு, கருவேல்நாயக்கன்பட்டியில் உள்ள கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்படுகிறது.
தற்போது தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் புதை சாக்கடைத் திட்டம் ரூ.67.76 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
இதுகுறித்து நகராட்சி அலுவலா்கள் கூறியதாவது: புதை சாக்கடை விரிவாக்கத் திட்டத்தில் கழிவு நீருந்து நிலையம் அமைக்க 13 இடங்களில் ஆய்வு நடைபெற்று வருகிறது. தற்போதுள்ள கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையத்தில் 16 மில்லியன் லிட்டா் வரை கழிவு நீரை சுத்திகரிக்கும் வசதி உள்ளதால், புதிதாக கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டியதில்லை. விரிவாக்கத் திட்டத்தின் கீழ் புதிதாக 13,862 கட்டடங்களுக்கு புதை சாக்கடை இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டது என்றனா்.