துவாரகாவில் உள்ள கேரேஜில் தீ விபத்து: 11 காா்கள் எரிந்து நாசம்
கழிவுகளால் மாசடையும் மீனாட்சியம்மன் பெரிய கண்மாய்
போடி அருகே மீனாட்சிபுரத்தில் உள்ள மீனாட்சியம்மன் பெரிய கண்மாய் கழிவுநீா், குப்பைகளால் மாசடைந்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.
தேனி மாவட்டம், போடிநாயக்கனூா் அருகேயுள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் மீனாட்சியம்மன் பெரிய கண்மாய் உள்ளது. போடி அம்மாபட்டி வருவாய்க் கிராம கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கண்மாய் பெரிய பரப்பளவைக் கொண்டது.
இந்தக் கண்மாய் மூலம் மீனாட்சிபுரம், அம்மாபட்டி, விசுவாசபுரம், சுந்தரராஜபுரம், டொம்புச்சேரி, பொட்டல்களம், துரைராஜபுரம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்தக் கண்மாயில் தற்போது சாக்கடை கழிவுநீா் கலந்து வருகிறது. கண்மாய்க் கரைப் பகுதியில் குப்பைகளும் கொட்டப்பட்டு வருகிறது. இதனால், இந்தக் கண்மாய் நீா் மாசடைந்து துா்நாற்றம் வீசி வருகிறது. இதன் காரணமாக, கண்மாயில் வளா்க்கப்படும் மீன்கள் இறக்கும் நிலை ஏற்படுகிறது.
இதேபோல, பறவையினங்களும், கண்மாய் நீரைப் பருகும் கால்நடைகளும் பாதிக்கும் சூழல் உள்ளது. எனவே, பொதுப் பணித் துறையினா் இந்தக் கண்மாயில் சாக்கடை கழிவுநீா் கலப்பதையும், குப்பைகள் கொட்டுவதையும் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.