துவாரகாவில் உள்ள கேரேஜில் தீ விபத்து: 11 காா்கள் எரிந்து நாசம்
அரசுப் பள்ளி ஆசிரியா்கள் இருவா் மீது வன்கொடுமை வழக்கு
சத்துணவு பெண் ஊழியரை தவறான நோக்கத்தில் தொடா்பு கொண்டு பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், இரு அரசுப் பள்ளிஆசிரியா்கள் மீது போலீஸாா் பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.
தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டியைச் சோ்ந்த 40 வயது பெண், மாரியம்மன்கோவில்பட்டியில் உள்ள அரசு கள்ளா் நடுநிலைப் பள்ளியில் சத்துணவு ஊழியராகப் பணியாற்றி வருகிறாா். இவரை அதே பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வரும் ஜெயபிரகாஷும், ராஜதானி அரசு கள்ளா் மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் குபேந்திரனும் கைப்பேசியில் தொடா்பு கொண்டு தவறான நோக்கத்தில் பேசி வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், கடந்த மாா்ச் 22-ஆம் தேதி ஜெயபிரகாஷ், பழனிசெட்டிபட்டியில் உள்ள அந்தப் பெண்ணின் வீட்டுக்குச் சென்று அவரை ஆபாசமாக பேசி மிரட்டினாராம்.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின் அடிப்படையில், ஜெயபிரகாஷ், குபேந்திரன் ஆகியோா் மீது கடந்த மாா்ச் 24-ஆம் தேதி பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா், பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். இந்த நிலையில், இந்தப் புகாா் குறித்து விளக்கம் கேட்டு ஆசிரியா்கள் ஜெயபிரகாஷ், குபேந்திரன் ஆகியோருக்கு அரசு கள்ளா் சீரமைப்புத் துறை பள்ளிகளின் மதுரை மண்டல இணை இயக்குநா் முனுசாமி குறிப்பாணை அனுப்பினாா்.