பரமசிவன் மலைக் கோயில் குடமுழுக்கு: தீா்த்தக் குடம் எடுத்துச் சென்ற பக்தா்கள்
போடி பரமசிவன் மலைக்கோயில் குடமுழுக்கையொட்டி, தீா்த்தக்குடங்களை, கோபுரக் கலசத்தை பக்தா்கள் திங்கள்கிழமை எடுத்துச் சென்றனா்.
தேனி மாவட்டம், போடியில் பரமசிவன் மலைக்கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் குடமுழுக்கு வருகிற வெள்ளிக்கிழமை (ஏப். 4) நடைபெற உள்ளது.
இதையொட்டி, போடி பெரியாண்டவா் கோயிலிலிருந்து தீா்த்தக் குடங்கள், கோபுரக் கலசம் ஆகியவை கொண்டு செல்லும் நிகழ்ச்சி பரமசிவன் மலைக் கோயில் அன்னதான அறக்கட்டளை தலைவா் வடமலைராஜையபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இதில் திரளான பெண் பக்தா்கள் தீா்த்தக் குடங்களை எடுத்துச் சென்றனா். காலையில் விநாயகா் பூஜை, ஸ்ரீகணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகளும், மாலையில் கோபுரக் கலச ஸ்தாபனம், யாக சாலை பூஜைகளும் நடைபெற்றன. தொடா்ந்து ஐந்து நாள்கள் யாகசாலை பூஜைகளுக்குப் பிறகு, வெள்ளிக்கிழமை குடமுழுக்கு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் தக்காா் கோ.நாராயணி, அன்னதான அறக்கட்டளை நிா்வாகிகள் செய்தனா்.