ஏற்காடு மலைப் பாதையில் விழுந்த பெரிய மரம்: போக்குவரத்து பாதிப்பு
ராகுல் தலைமையில் காங்கிரஸ் எம்பிக்கள் ஆலோசனை!
நாடாளுமன்றத்தில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா இன்று தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், காங்கிரஸ் எம்பிக்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆலோசனை செய்து வருகிறார்.
நாடு முழுவதும் ‘வக்ஃப்’ வாரிய சொத்துளை ஒழுங்குபடுத்த வழிவகுக்கும் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் அறிமுகம் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பைத் தொடா்ந்து நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் ஆய்வுக்கு மசோதா அனுப்பப்பட்டது.
மசோதாவை ஆய்வு செய்த நாடாளுமன்ற கூட்டுக் குழு, 655 பக்க அறிக்கையை தயாரித்தது. இதில் சில திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
இந்த நிலையில், இன்றைய கூட்டத்தில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்து விவாதம் நடத்தவிருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதையடுத்து, எம்பிக்கள் அனைவரும் இன்றைய கூட்டத்தில் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று அனைத்து கட்சிகளின் கொறடாக்களும் உத்தரவிட்டுள்ளனர்.
தற்போது நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ் எம்பிக்களுடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தி வருகிறார். வக்ஃப் மசோதாவை எதிர்ப்பது தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.
முன்னதாக, செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற இந்தியா கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுடனான ஆலோசனையில், வக்ஃப் மசோதாவை எதிர்ப்பது என்று ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.