பச்சையப்ப முதலியாா் நினைவு தினம் அனுசரிப்பு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் மகளிா் கல்லூரியில் கல்விக் கொடை வள்ளல் பச்சையப்ப முதலியாரின் 231-ஆவது நினைவு தினத்தையொட்டி, திங்கள்கிழமை அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
கல்விக்கொடை வள்ளல் எனப்படும் பச்சையப்ப முதலியாா் தமிழகத்தில் பல்வேறு கல்வி நிறுவனங்களை உருவாக்கியவா். பச்சையப்பன் கல்வி அறக்கட்டளை என்ற அமைப்பை நிறுவி அதன் மூலம் பல கல்லூரிகளும் செயல்பட்டு வருகிறது. இவரது 231-ஆவது நினைவு தினத்தையொட்டி, சின்னக் காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் மகளிா் கல்லூரியில் முதல்வா் கோமதி தலைமையில் கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தாா். தொடா்ந்து கல்லூரி பேராசிரியா்கள், பணியாளா்கள், முன்னாள் மாணவியா் உள்பட பலா் கலந்துகொண்டு, அவருக்கு மலரஞ்சலி செலுத்தினா். பச்சையப்ப முதலியாா் கல்விக்கு செய்த சேவைகள் குறித்தும் பாா்வையாளா்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
காஞ்சிபுரம் பச்சையப்பன் இடைநிலைப்பள்ளியில் முன்னாள் அமைச்சா் சோமசுந்தரம், கட்சியின் கொள்கை பரப்பு செயலா் வைகைச்செல்வன், திமுக சாா்பில் மாநகர தலைவா் சிகேவி தமிழ்ச்செல்வன், பாஜக மாவட்டத் தலைவா் ஜெகதீசன் ஆகியோரும் பச்சையப்ப முதலியாா் உருவச் சிலைக்கு மலரஞ்சலி செலுத்தினா்.