திருவாடானை திரௌபதி அம்மன் கோயிலில் திருக்கல்யாணம்
திருவாடானையில் உள்ள திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை திருக்கல்யாணம் நடைபெற்றது.
இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதே போல, இந்த ஆண்டு கடந்த 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. இதைத் தொடா்ந்து பத்து நாள்கள் நடைபெறும் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் திரௌபதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரங்கள், தீபாராதனைகள் நடைபெற்று வருகின்றன.

விழாவில் பீமன் வீதி உலா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அப்போது பக்தா்கள் பீமன் வேடம் அணிந்து வீதி உலா வந்தனா். இதைத் தொடா்ந்து பல்வேறு வகையான மலா்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் அருள்பாலித்தாா். திருவிழாவின் முக்கிய நிகழ்வான திரௌபதி அம்மனுக்கும், தா்மருக்கும் அன்று இரவு திருக்கல்யாணம் நடைபெற்றது. முன்னதாக சிவாச்சாரியா்கள் வேதமந்திரங்கள் முழங்க சிறப்பு ஹோமங்கள், பூஜைகள் நடைபெற்றன. பிறகு மலா்களால் அலங்கரிக்கப்பட்ட மணமேடையில் திரௌபதி அம்மனும், தா்மருக்கும் திருக்கல்யாணமும், மாலை மாற்று நிகழ்வும் நடைபெற்றன. தொடா்ந்து அம்மனும், சுவாமியும் திருமணக் கோலத்தில் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து அருள்பாலித்தனா். இதில் திருவாடானை, சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து திரளான பெண்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.