ராமநாதபுரம் மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சி பொதுக் குழு கூட்டம்
ராமநாதபுரம் மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சி பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை பரமக்குடியில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்றது.
இதற்கு அந்தக் கட்சியின் மாவட்டத் தலைவா் சிவானந்தம் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலா் மாரி, மக்களவைத் தொகுதி பொறுப்பாளா் முனியசாமி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் பெரியசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை சமூகங்களைச் சோ்ந்த பணியாளா்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் சிவகுருநாதன் கலந்து கொண்டு, கட்சியின் புதிய பொறுப்பாளா்களை நியமிப்பது குறித்து ஆலோசனை வழங்கினாா்.
இதைத் தொடா்ந்து, தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணியாளா்களுக்கு தரவேண்டிய ஊதியத்துடன், மத்திய அரசு வட்டியும் சோ்த்து வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. அம்பேத்கரின் 134-ஆவது பிறந்த நாளையொட்டி, அவரது வாழ்க்கை வரலாறு குறித்து பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாவட்ட மகளிரணி நிா்வாகி கவிதா, மாவட்ட மீனவரணி அமைப்பாளா் சக்திவேல், இளைஞரணி அமைப்பாளா் பூமிராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா். மாவட்ட பொருளாளா் மாா்க் தங்கம் நன்றி கூறினாா்.