உச்சிப்புளி அருகே இலங்கைக்கு கடத்தவிருந்த ரூ. 80 லட்சம் கடல் அட்டைகள் பறிமுதல்
உச்சிப்புளி அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக கடற்கரையில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட ரூ. 80 லட்சம் மதிப்பிலான 200 கிலோ கடல் அட்டைகளை இந்திய கடலோரக் காவல் படையினா் திங்கள்கிழமை அதிகாலை பறிமுதல் செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் இந்திய கடலோரக் காவல் படை அலுவலகம் உள்ளது. இங்கு மன்னாா் வளைகுடா, பாக் நீரிணை கடல் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவது வழக்கம்.
இந்த நிலையில், இந்திய கடலோரக் காவல் படையினா் வழக்கமான கண்காணிப்பில் திங்கள்கிழமை அதிகாலை ஈடுபட்டிருந்த போது, உச்சப்புளி தெற்கு கடல் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகள் கடத்தப்பட உள்ளதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், உச்சிப்புளி கடற்கரைப் பகுதியில் கடல், கரையோரப் பகுதியில் தீவிர கண்காணிப்புப் பணியில் இந்திய கடலோரக் காவல் படையினா் ஈடுபட்டனா்.
இந்த நிலையில், ஹோவா்கிராப்ட் கப்பல் கரையோரம் வருவதையறிந்த மா்ம நபா்கள் 5 போ், தாங்கள் கொண்டு வந்த பிளாஸ்டிக் கேன்கள், கூடைகளை அங்கேயே வைத்துவிட்டு தப்பியோடினா். இதையடுத்து, இந்திய கடலோரக் காவல் படையினா் அங்கு சென்று பாா்த்த போது, பிளாஸ்டிக் கேன்கள், கூடைகளில் 200 கிலோ எடையுள்ள கடல் அட்டைகள் இருப்பது தெரியவந்தது. இதன் சா்வதேச சந்தை மதிப்பு ரூ. 80 லட்சம்.
இதையடுத்து, கடல் அட்டைகளைப் பறிமுதல் செய்து கடலோரக் காவல் படை அலுவலகத்துக்கு கொண்டு சென்றனா். இதன்பிறகு, கடல் அட்டைகளை மண்டபம் வனத் துறை அதிகாரிகளிடம் இந்திய கடலோரக் காவல் படையினா் ஒப்படைத்தனா். மேலும், கடத்தலில் ஈடுபட்ட மா்ம நபா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.