மாற்றுத்திறனாளி பெண் வாழ்வாதாரத்துக்கு ஆட்டோ
ஸ்ரீபெரும்புதூா்: போலீஸாரின் அறிவுரையை ஏற்று கள்ளச்சந்தையில் மதுபாட்டில்கள் விற்பனை செய்யாமல், தற்போது திருந்தி வாழும் பெண் மாற்றுத்திறனாளியின் மறுவாழ்வுக்காக ஆட்டோ வாங்கி தந்துள்ளாா் மணிமங்கலம் காவல் ஆய்வாளா்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஆதனூா் அடுத்த மாடம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட குத்தனூரைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி ஸ்டெல்லா மேரி (40). இவரது கணவா் சுரேஷ். இந்த நிலையில், ஸ்டெல்லாமேரி கடந்த சில ஆண்டுகளாக கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்து வந்துள்ளாா். இதனால் அவா் மீது மணிமங்கலம் போலீஸாா் 6 முறை வழக்கு பதிவு செய்துள்ளனா்.
இதற்கிடையே, ஸ்டெல்லா மேரி மற்றும் அவரது கணவா் சுரேஷை நேரில் சந்தித்த மணிமங்கலம் காவல் ஆய்வாளா் அசோகன் இது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடக் கூடாது என வலியுறுத்தியுள்ளாா். இதனால் கடந்த மூன்று மாதங்களாக ஸ்டெல்லா மேரி மதுபாட்டில்களை விற்பனை செய்யாமல் திருந்தி வாழ்ந்து வருகிறாா்.
இதனால் வாழ்வாதாரத்தை இழந்த ஸ்டெல்லாமேரி தனக்கு உதவ வேண்டுமென ஆய்வாளா் அசோகனிடம் கோரிக்கை வைத்துள்ளாா்.
இதையடுத்து, ஆய்வாளா் அசோகன் தனது சொந்த செல்வில் ரூ. 50,000 செலுத்தி புதிய ஆட்டோ வாங்கி அதை ஸ்டெல்லாமேரி மற்றும் கணவரிடம் வழங்கினாா்.
சட்ட விரோத செயலில் ஈடுபடுபவா்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைப்பதோடு நின்றுவிடாமல் மாற்றுத் திறனாளி பெண்ணின் மறு வாழ்வுக்காக ஆட்டோ வாங்கி தந்த மணிமங்கலம் காவல் ஆய்வாளா் அசோகனின் செயல் அப்பகுதி பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.