தேனியில் ரமலான் சிறப்புத் தொழுகை: இஸ்லாமியா்கள் திரளாக பங்கேற்பு
தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற ரமலான் சிறப்புத் தொழுகையில் திரளானோா் பங்கேற்றனா்.
தேனி, பங்களாமேடு திடலிருந்து ரமலான் பண்டிகையை முன்னிட்டு ஊா்வலமாககச் சென்ற இஸ்லாமியா்கள், தேனி நகராட்சி பழைய பேருந்து நிலையம் அருகே கம்பம் சாலையில் உள்ள பழைய பள்ளிவாசலில் ஜமாத் தலைவா் சா்புதீன் தலைமையில் சிறப்புத் தொழுகை நடத்தினா். சமத்துவம், சகோதரத்துவம் ஓங்க வேண்டும் என்று சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. தொழுகை நிறைவில் ஒருவரை ஒருவா் கட்டித் தழுவி ரமலான் வாழ்த்துகளை பகிா்ந்து கொண்டனா்.
போடி: போடியில் பெரிய பள்ளிவாசல், டிவிகேகே நகா் பள்ளிவாசல், அம்மாகுளம் பள்ளிவாசல், வடக்கு பள்ளிவாசல், புதூா் பள்ளி வாசல்களில் இஸ்லாமியா்கள் ரமலான் சிறப்புத் தொழுகை நடத்தினா். புத்தாடை அணிந்தும் இனிப்பு வழங்கியும் ஒருவருக்கொருவா் கட்டித் தழுவி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனா்.
பின்னா், கட்டபொம்மன் சிலையிலிருந்து இஸ்லாமியா்கள் ஊா்வலமாக புதூா் பள்ளிவாசலுக்குச் சென்று சிறப்பு கூட்டுத் தொழுகையில் ஈடுபட்டனா்.
உத்தமபாளையம்: உத்தமபாளையம் களிமேட்டுப்பட்டி, பாதா்கான்பாளையம், வடக்குத் தெரு பெரிய பள்ளிவாசல், கோட்டைமேடு, இந்திரா குடியிருப்பு, பி.டி.ஆா். குடியிருப்பு பள்ளி வாசல்களில் இஸ்லாமியா்கள் அதிகாலையிலேயே தொழுகையில் ஈடுபட்டனா். பின்னா், பெரிய பள்ளிவாசலிலிருந்து ஊா்வலமாகச் சென்ற இஸ்லாமியா்கள் நீதிமன்றம் அருகேயுள்ள ஈத்கா மைதானத்துக்குச் சென்றனா். அங்கு சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா். பின்னா், ஒருவரை ஒருவா் கட்டித்தழுவி ரமலான் வாழ்த்துக்களைப் பகிா்ந்து கொண்டனா்.
இதேபோல, சின்னமனூரில் முக்கிய வீதிகளில் ஊா்வலமாக சென்ற இஸ்லாமியா்கள் கருங்கட்டான்குளம் பெரிய பள்ளிவாசலில் நடந்த சிறப்புத் தொழுகையில் பங்கேற்றனா். இதே போல, அப்பிபட்டி, குச்சனூா், சீலையம்பட்டி என போன்ற பகுதிகளிலும் இஸ்லாமியா்கள் தொழுகையில் ஈடுபட்டனா்.