காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோயில் பங்குனித் திருவிழா நிறைவு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோயில் பங்குனித் திருவிழா நிறைவு பெற்றதையொட்டி திங்கள்கிழமை ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவா் யதோக்தகாரி பெருமாள் வெட்டிவோ் சப்பரத்தில் வீதியுலா வந்தாா்.
சின்னக்காஞ்சிபுரத்தில் உள்ளது கோமளவல்லித் தாயாா் சமேத யதோக்தகாரி பெருமாள் கோயில். இக்கோயில் பங்குனித் திருவிழா கடந்த 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி, தினசரி காலையிலும், மாலையிலும் பெருமாள் வெவ்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்தாா். மாா்ச் 24-ஆம் தேதி கருட வாகன சேவையும், 28-ஆம் தேதி தேரோட்டமும், 30-ஆம் தேதி தீா்த்தவாரி உற்சவமும் நடைபெற்றது.
விழா நிறைவையொட்டி ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவா் யதோக்தகாரி பெருமாள் வெட்டி வோ் சப்பரத்தில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அறங்காவலா் நல்லப்பா நாராயணன் தலைமையில் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.