தனியாா் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்த சட்டம்: காங்கிரஸ் வலியுற...
தமிழ்நாட்டில் 2ஆவது இடத்திற்குதான் போட்டி: முதல்வர் மு.க.ஸ்டாலின்
திமுகதான் எப்போதும் ஆளுங்கட்சி, தமிழ்நாட்டில் 2ஆவது இடத்திற்குதான் தற்போது போட்டி உள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை சென்னை பெரம்பூர் டான் பாஸ்கோ பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்று, கொளத்தூர் தொகுதி இஸ்லாமியப் பெருமக்களுக்கு ரமலான் பரிசுப் பொருட்களை வழங்கினார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ்நாடு அடைய இருக்கும் வளர்ச்சிக்கு வலுவான – அழுத்தமான – கம்பீரமான அடித்தளம் அமைக்கும், ‘எல்லாருக்கும் எல்லாம்’ நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து, சட்டமன்றக் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கிறது. முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் கூட்டத் தொடர் நடக்கும் வேளையில் உங்களை எல்லாம் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
இப்தார் விழாக்களைப் பலரும் நடத்துவார்கள். ஆனால், இஸ்லாமியர்களுக்கு ஒரு தீமை நடக்கும்போது வாயைத் திறக்க மாட்டார்கள். ஆனால், குடியுரிமைத் திருத்தச் சட்டமாக இருந்தாலும், காஷ்மீருக்கான 370-ஆவது பிரிவை ரத்து செய்வதாக இருந்தாலும், சிறுபான்மையினருக்கு எதிராக எது நடந்தாலும் முதல் எதிர்ப்புக்குரல் கொடுத்துக் கொண்டிருப்பது நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம்தான்.
இப்போது கூட வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராகக் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து நாடாளுமன்றத்திலும், நாடாளுமன்றக் கூட்டுக் குழுவிலும் தி.மு.க. சார்பாக நாம் தொடர்ந்து குரல் எழுப்பிக் கொண்டு வருகிறோம்.
இரண்டு நாட்களுக்கு முன்பு கூட, இஸ்லாமியரை வஞ்சிக்கும் இந்த சட்டத் திருத்தத்தை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்று நம்முடைய தமிழ்நாடு சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் நிறைவேற்றி, நம்முடைய அரசின் நிலைப்பாட்டை நாம் தெளிவாக அறிவித்திருக்கிறோம்!
இந்தத் தீர்மானத்தை, தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்திய அளவிலும் - உலக அளவிலும் இருக்கும் பல்வேறு இந்திய முஸ்லீம் அமைப்புகள் வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள், நம்மைப் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்! ஆனால், தீர்மானத்தில் கூட எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளவில்லை. ஏன் என்று உங்களுக்கு தெரியும்.
இரவோடு இரவாகத் திட்டம் தீட்டி, விடியற்காலையில் யாருக்கும் தெரியாமல் தில்லிக்கு சென்றார் ஒருவர், அவர்தான் எதிர்கட்சித் தலைவர். அவ்வாறு விமான நிலையத்தில் இறங்கி, நான்கு கார்கள் மாறி மாறிச் சென்றிருக்கிறார். அது தெளிவாக அனைத்துப் பத்திரிகைகளிலும் வெளிவந்திருக்கிறது.
அவ்வாறு பல கார்கள் மாறிச் சென்று என்ன செய்திருக்கிறார் என்றால், இந்தச் சட்டத்தைக் கொண்டு வர இருக்கும் அமித்ஷா-வைச் சந்தித்திருக்கிறார், இதுதான் முக்கியம். மறுநாள் இந்தத் தீர்மானத்தை நாம் கொண்டு வரப்போகிறோம் என்று தெரிந்தும் சட்டமன்றத்துக்கு வரவில்லை. இன்றைக்கு பிரதான எதிர்க்கட்சி அ.தி.மு.க.தான். இதில் வேடிக்கை என்ன என்றால், இன்றைக்கு கூட மாலையில் பத்திரிகைகளில் பார்த்திருக்கலாம். அடுத்து நாங்கள்தான் ஆளுங்கட்சி, ஆளுங்கட்சி என்று சொல்லிக் கொண்டிருந்தார் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி.
இன்றைக்கு ஒருவருக்கு பதில் சொல்வதற்காக அவர் ஒரு பேட்டி தந்திருக்கிறார், நாங்கள்தான் அடுத்த எதிர்க்கட்சி என்று. எனவே, ஆளுங்கட்சி, ஆளுங்கட்சி என்று சொல்லிக் கொண்டிருந்தவர், எதிர்க்கட்சி என்று சொல்லும் நிலைக்கு இன்றைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். இதுதான் இன்றைக்கு இருக்கும் நிலை. எனவே, இப்போது இரண்டாவது இடத்திற்கு யார் வருவது என்றுதான் அவர்களுக்குள் போட்டி ஏற்பட்டிருக்கிறது. நம்மைப் பொறுத்தவரை, நாம்தான் எப்போதும் முதல் இடத்திற்கு வரப்போகிறோம்; நாம்தான் ஆளுங்கட்சி. நான் ஏதோ, மமதையில் – அகங்காரத்தில் சொல்கிறேன் என்று நினைத்துவிடாதீர்கள். மக்களிடத்தில் இருக்கும் ஆதரவு – மக்கள் நம்மை வரவேற்கும் காட்சியை வைத்து நான் சொல்கிறேன்.
இஸ்லாமியர்களுக்கு ஒரு பக்கம் ஆபத்து வந்தால், ஆட்சியில் இருந்தாலும் – இல்லை என்றாலும், அதை எதிர்க்கும் நிலையில் இருக்கும் கட்சிதான், திராவிட முன்னேற்றக் கழகம்.
இஸ்லாமியர்களின் கல்வி வளர்ச்சி, இட ஒதுக்கீடு மூலமாக அவர்களுக்கான சமூகநீதி எல்லாம் கிடைப்பதற்கான அனைத்து முயற்சிகளிலும் இன்றைக்கு இந்த ஆட்சி ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.