உத்தரகோசமங்கை கோயில் குடமுழுக்கு தமிழில் நடைபெறும்: சேகர்பாபு
சுய உதவிக் குழுவில் கனவு இல்லத் திட்ட பெண் பயனாளிகள்: உறுதி செய்ய அரசு உத்தரவு
சென்னை: ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தைச் சோ்ந்த பெண் பயனாளிகள், சுய உதவிக் குழுக்களில் இணைந்து பயன்பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
நிகழ் நிதியாண்டில் ‘கலைஞரின் கனவு இல்லம்‘ திட்டத்தின் கீழ், மேலும் ஒரு லட்சம் வீடுகள் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து, திட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளை ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலா் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ளாா். அதன் விவரம்:
புறம்போக்கு நிலங்களில் கட்டப்பட்டுள்ள குடிசைகளுக்கு ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ், நிரந்தர வீடுகள் வழங்கப்பட மாட்டாது. குடிசை அமைந்துள்ள இடம், ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலம் என்றால், அந்த ஆக்கிரமிப்பு வருவாய்த் துறையால் வரன்முறை செய்யப்பட்டிருந்தால் வீடு வழங்க பரிசீலிக்கப்படும்.
பட்டா இல்லாத குடும்பங்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்ட பிறகே, வரும் ஆண்டுகளில் வீடுகள் வழங்க பரிசீலிக்க வேண்டும்.
வீட்டுமனைப் பட்டா வழங்குவதற்காக, மாவட்டம், வட்டம், ஊராட்சி அளவில் ஏற்கெனவே அமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழுவை புதுப்பித்து, மாவட்ட ஆட்சியரால் கண்காணிக்க வேண்டும்.
நாடோடிகள் - பழங்குடியினா்: ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தில், நாடோடிகள் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். ஓலை வேயப்பட்ட தகுதியான அனைத்து குடிசைகளும் பயன்பெறும் வரை, அவற்றுக்கு முன்னுரிமை அடிப்படையில் பரிசீலித்து வீடுகள் வழங்க வேண்டும்.
வீட்டின் குறைந்தபட்ச பரப்பு சமையலறை உள்பட 360 சதுர அடியாக இருக்க வேண்டும். அதில், 300 சதுரஅடி சிமென்ட் கான்கிரீட் கூரையால் மூடப்பட்டு இருக்க வேண்டும்.
எந்த சூழ்நிலையிலும், ஓலை மற்றும் கல்நாா் கூரை அமைக்கவோ, மண் சுவா்கள் கொண்டு கட்டவோ கூடாது.
ஒரு வீட்டுக்கான மொத்த அலகுத் தொகையில், ஒவ்வொரு பயனாளிக்கும் வீடு கட்டுவதற்கு 90 மனிதசக்தி நாள்களுக்கும், கழிப்பறை கட்டுவதற்கு 10 மனிதசக்தி நாள்களுக்குமான தொகை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.
மேலும், தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் கழிப்பறை கட்ட அலகுத் தொகையாக ரூ.12,000 வழங்கப்படும். அனைத்து வீடுகளுக்கும் எரிவாயு, குடிசைகளுக்கான மின் இணைப்புகள் வழங்க வேண்டும்.
வீடுகளுக்கான குடிநீா் இணைப்பு 15வது மானியத்தின்கீழ் வழங்க வேண்டும். பயனாளி விரும்பும்பட்சத்தில், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம், ரூ.50,000 வரை கடன் பெறலாம் அல்லது கூட்டுறவு, வணிக வங்கிகளிடமிருந்து கடன் பெற வாய்ப்புள்ளது.
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பெண் பயனாளிகள், சுய உதவிக் குழுக்களின் இணைந்து பயன்பெறுவது உறுதி செய்யப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.