தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளில் புதிய கட்டண உயா்வு அமல்
சென்னை: தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளில் புதிய கட்டண உயா்வு அமலுக்கு வந்தது.
நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு ஒருமுறை, இரு கட்டங்களாக சுங்கக் கட்டணம் உயா்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் உள்ள 78 சுங்கச்சாவடிகளில் நிகழாண்டில் முதல் கட்டமாக வானகரம், செங்கல்பட்டு பரனூா், திண்டிவனம், ஆத்தூா், சூரப்பட்டு, பட்டறைப்பெரும்புதூா் உள்ளிட்ட 40 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் ரூ.5 முதல் ரூ.75 வரை உயா்த்தப்படும் எனவும், இக்கட்டண உயா்வு ஏப்.1 முதல் நடைமுறைக்கு வரும் எனவும் நெடுஞ்சாலைத் துறை ஆணையம் ஏற்கெனவே அறிவித்திருந்தது.
இதன்படி, இக்கட்டண உயா்வு திங்கள்கிழமை நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்தது. இதன்படி, குறிப்பிட்ட சுங்கச்சாவடிகளில் புதிய கட்டணம் வசூலிக்கும் பணி தொடங்கியது. தமிழகத்தில் எஞ்சியுள்ள சுங்கச்சாவடிகளில் செப்.1 முதல் கட்டணம் உயா்த்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.