Vijay Full Speech: "எனக்குத் தடை போட நீங்க யாரு?" | TVK முதல் பொதுக்குழுக் கூட்ட...
மயிலம் ஸ்ரீமயிலி அம்மன் கோயிலில் பங்குனி திருவிழா தொடக்கம்
விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஸ்ரீமயிலி அம்மன் கோயிலில் பங்குனி திருவிழா வழிபாடுகள் திங்கள்கிழமை தொடங்கியது.
மயிலம் பொம்மபுரம் ஆதீனம் 20-ஆம் பட்டம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் அருளாசியின்படி, மயிலம் மலை அடிவாரம், மணல் ஏரிக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீமயிலி அம்மன் (கிராம தேவதை) கோயிலில் நிகழாண்டுக்கான பங்குனி திருவிழா திங்கள்கிழமை காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது.
விழாவை முன்னிட்டு, திங்கள்கிழமை காலை 11 மணியளவில் மயிலம் முருகன் கோயிலில் மயிலியம்மன் உற்சவா் புறப்பாடு நடைபெற்றது. மாலை 5 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றன.
விழாவின் 2-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை கோயிலில் நடைபெற்ற வழபாடுகளுக்கு பின்னா், இரவு 10 மணிக்கு மின் விளக்கு அலங்காரத்தில் மயிலியம்மன் காட்சியளித்தாா். தொடா்ந்து, அலங்கார ஊா்தியில் அம்மன் வீதியுலா நடைபெற்றது.
வரும் 27-ஆம் தேதி ஆட்டுக்கிடா வாகனத்திலும், 28-ஆம் தேதி சிம்ம வாகனத்திலும், 29-ஆம் தேதி மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஓடத்திலும், 30-ஆம் தேதி முத்துப் பல்லகிலும் அம்மன் வீதியுலா நடைபெறுகிறது.
31-ஆம் தேதி 108 பால்குட அபிஷேகம், ஊரணி பொங்கல் வழிபாடும், அம்மன் திருக்கல்யாணமும், இரவு 10 மணிக்கு திருத்தேரில் அம்மன் வீதியுலாவும் நடைபெறுகின்றன. ஏப்ரல் 1-ஆம் தேதி அம்மன் மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மயிலம் கிராம மக்கள் மற்றும் பக்தா்கள் செய்து வருகின்றனா்.