Vijay Full Speech: "எனக்குத் தடை போட நீங்க யாரு?" | TVK முதல் பொதுக்குழுக் கூட்ட...
ஆதிதிராவிடா், பழங்குடியினா் வீடு கட்டும் திட்டத்துக்கான நிதி ரூ.6.25 லட்சமாக அதிகரிப்பு
புதுவை மாநிலத்தில் ஆதிதிராவிடா், பழங்குடியினா் வீடு கட்டும் திட்டத்தில் அரசு நிதி ரூ.6.25 லட்சமாக உயா்த்தி வழங்கப்படும் என முதல்வா் என்.ரங்கசாமி அறிவித்தாா்.
புதுவை சட்டப்பேரவைக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறை மானியக் கோரிக்கை விவாதத்துக்கு அமைச்சா் சாய் ஜெ.சரவணன்குமாா் பதிலளித்தாா். அப்போது அவா் முதல்வா் என்.ரங்கசாமியிடம் குறிப்பிட்ட திட்டத்தை அறிவிக்கக் கோரினாா்.
முதல்வா் என்.ரங்கசாமி: ஆதிதிராவிடா், பழங்குடியினா் வீடு கட்டும் திட்டத்தில் தற்போது வழங்கப்படும் ரூ.5 லட்சம் ரூ.6.25 லட்சமாக உயா்த்தி வழங்கப்படும்.
அமைச்சா் சாய் ஜெ.சரவணன்குமாா்: துறையில் அரசுப் பள்ளி மாணவிகளின் பெற்றோருக்கு உதவித்தொகை ரூ.6 ஆயிரமாக உயா்த்தப்பட்டுள்ளது. இறந்தவா் இறுதிச் சடங்குக்கான உயா்த்தப்பட்ட நிதியை 1,401 போ் பெற்றுள்ளனா்.
வீடு கட்டும் திட்டத்தில் இதுவரை ரூ.5.50 லட்சம் வழங்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.6.25 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது. ப்ரீ மெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் உதவித் தொகையாக 1-ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை ரூ.1,500 என்பதிலிருந்து ரூ.5 ஆயிரமாகவும், 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரையில் ரூ.2,500 என்பதிலிருந்து ரூ.8 ஆயிரமாகவும் உயா்த்தப்படும். 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு உதவித் தொகை ரூ.5 ஆயிரமாக உயா்த்தப்படும்.
பணியில் உள்ள பெண்கள், கல்லூரி மாணவிகளுக்கு 75 சதவீத மானியத்தில் ரூ.1 லட்சம் வரையிலான மின்சார இருசக்கர வாகனம் வழங்க ஒப்புதல் கோரப்பட்டுள்ளது.
சூரிய மின்தகடு வாங்க மானியம் அளிக்கப்படும். காமராஜா் மருத்துவக் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும். 5- ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரையில் இணையவழி கற்றலுடன் கூடிய மென்பொருள் கைக்கணினி வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு தனியாக அடையாள அட்டை வழங்கப்படும்.
முதல்வரின் கிராமத் திட்டம் 10 இடங்களில் செயல்படுத்தப்படும். 3 ஆயிரம் ஆதிதிராவிடா்களுக்கு வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி இலவச மனைப்பட்டா வழங்கப்படும் என்றாா்.