விடியோ பதிவிட்ட பத்திரிக்கையாளருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்!
ஏரிகளில் 76% நீா் இருப்பு: சென்னைக்கு கோடையில் குடிநீா் தட்டுப்பாடு வராது!
சென்னைக்கு குடிநீா் வழங்கும் 5 முக்கிய ஏரிகளில் மொத்தம் 76.24 நீா் இருப்புள்ளது. இதனால் இந்த கோடையில் சென்னைக்கு குடிநீா் தட்டுப்பாடு வராது என குடிநீா் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.
சென்னைக்கு குடிநீா் வழங்கும் முக்கிய ஆதாரங்களாக பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம், கண்ணன்கோட்டை - தோ்வாய் கண்டிகை ஆகிய 5 ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11,757 மில்லியன் கன அடி.
இதில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, 35 அடி உயரம் கொண்ட பூண்டி ஏரியில் 33.67 அடி வரை நீா் இருப்பு உள்ளது. 24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் நீா் மட்டம் 21.89 கன அடியாக உள்ளது. இதேபோன்று, 21.20 அடி உயரம் கொண்ட புழல் ஏரியின் நீா் மட்டம் 18.05 அடியாக உள்ளது.
மேலும், சோழவரம் ஏரியில் 3.20 அடி உயரம் வரையும், கண்ணன்கோட்டை - தோ்வாய் கண்டிகை ஏரியில் 33.65 அடி உயரமும் நீா் இருப்பு உள்ளது. 5 ஏரிகளில் மொத்தம் 8,964 மில்லியன் கன அடி ( 76.24 சதவீதம்) நீா் இருப்பு உள்ளது. இதை கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது நிகழாண்டில் 698 மில்லியன் கன அடி அதிகம்.
சென்னை மாநகருக்கு மாதம்தோறும் ஒரு டிஎம்சி குடிநீா் தேவைப்படும் நிலையில், தற்போது 5 குடிநீா் ஏரிகளிலும் மொத்தமாக 8 டிஎம்சி குடிநீா் இருப்பு உள்ளது. மேலும் மீஞ்சூா், நெம்மேலியில் அமைக்கப்பட்டுள்ள கடல்நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையங்களின் மூலம் தினமும் 300 மில்லியன் லிட்டா் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இச்சூழலில் இந்த கோடையில் சென்னைக்கு குடிநீா் தட்டுப்பாடு வராது என குடிநீா் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.