ஹூசைனி என்கிற வீரனை கடுமையான நோய் தாக்கி வீழ்த்தியிருக்கு - கலங்கும் குடும்ப நண்பர் ஜெயந்தி
பிரபல கராத்தே மாஸ்டரும், நடிகருமான ஷிஹான் ஹுசைனி உடல்நலக் குறைவால் இன்று (25.03.2025) காலமாகினார். அவரின் மறைவிற்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் A.L.S தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்தவரும், ஹூசைனியின் குடும்ப நண்பருமான ஜெயந்தி கண்ணப்பன் அவர்களிடம் ஹூசைனியின் இறப்பு குறித்த இரங்கலை தெரிவித்துக் கொண்டு பேசினோம்.

'அவரைப் பார்க்கும்போதே நமக்கு ஒரு எனர்ஜி வந்துடும். களையான முகம். நல்ல உடல்தகுதியுடன் தான் இருப்பாரு...'என்று ஹூசைனி பற்றிய நினைவுகளை பகிரத் தொடங்கினார் ஜெயந்தி கண்ணப்பன்.
மேலும் பேசியவர், "எனது கணவர் A.L.S கண்ணப்பன் 1994 -ம் ஆண்டு சன் டி.வியில் ‘அனுபவம் பல விதம்’-னு ஒரு புரொகிராமை 150 எபிசோடுகள் பண்ணினாரு. அந்த சமயத்துல தான் ஹூசைனி எங்கள் குடும்பத்திற்குப் பழக்கமானார். நாங்கள் நடத்திய அனுபவம் பல விதம் புரோகிராம்ல அவரு கலந்துகிட்டாரு.
ஹூசைனியின் முதல் டிவி அனுபவம் இதுதான். கேமரா ஆன் என்று சொன்னால் ரொம்பவே உற்சாகமா சாகசங்களை செய்ய ஆரம்பிச்சிருவாரு. ஒரு சம்பவத்தை அப்படியே புரோகிராமில் ஆக்ட் பண்ணி காமிப்பாரு. அந்த புரொகிராம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. எங்களுக்கு நிறைய புரொகிராமை செய்துக்கொடுத்திருக்காரு.

அவரைப் பார்க்கும்போதே நமக்கு ஒரு எனர்ஜி வந்திடும். களையான முகம். நல்ல உடல்தகுதியுடன் தான் இருப்பாரு. எப்போதும் இளமை மாறாமல் இருப்பாரு. பெசன்ட் நகர் கடலோரப் பகுதியில் ஒரு வீட்டை வாங்கி தனது வாழ்ககையை கராத்தேவிற்காக அர்ப்பணித்தவர். நிறைய பெண் குழந்தைகள் தற்காப்பைக் கற்றுக்கொள்ளணும்னு நினைச்சாரு. அவர்களிடம் யாரும் தவறாக நெருங்கக்கூடாதுன்னு சொல்லுவாரு.
ரொம்ப வித்தியாசமானவர். எதையும் ரசனையுடன் பார்க்கக்கூடியவர். சிலை வடிப்பது, ஓவியம் வரைவது எனப் பல விஷயங்களைச் செய்வார். அவருடைய வீட்டை அருங்காட்சியகம் போலத்தான் வைத்திருப்பார். கராத்தே பற்றிய விஷயங்கள் இளைய சமுதாயத்துக்கு சரியாக சென்றடைய வேண்டும்னுதான் அவர் சினிமாவை தேர்ந்தெடுத்தாரு. அவர் இருக்க இடமே ரொம்ப கலகலப்பாக இருக்கும்.
எங்க குடும்பவிழாவிற்கு எல்லாம் வந்திருக்காரு. பயங்கர சுறுசுறுப்பாக இருப்பாரு. அப்படிபட்ட ஒரு வீரனை கடுமையான நோய் தாக்கி வீழ்த்தி இருக்கு. அனைத்து பிரபலங்களாலும் ரசிக்கப்பட்டவர். நிறைய அரசியல் தலைவர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் எல்லாம் அவரை நிறைய ஊக்கப்படுத்தி இருக்காங்க. அவருடைய முகத்தை யாராலும் மறக்க முடியாது.

பிறப்பு என ஒன்று இருந்தால் இறப்பு என ஒன்று கட்டாயமாக இருக்கும். அதில் இருந்து யாராலும் தப்பிக்க முடியாது. அந்த இறப்பிலும் தைரியமாக நிறைய விஷயங்களை ஹூசைனி எதிர்கொண்டிருக்கிறார். கொடுமையான நோய் தாக்கியிருந்தபோதும் ரொம்பவே தன்னம்பிக்கையாக இருந்தார். அதைதான் அவரிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். அவர் பெயர் என்றைக்கும் நிழைத்து நிற்கணும்” என்று வருத்தத்தோடு பகிர்ந்துகொண்டார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...