``பாகிஸ்தான் போயிட்டு வந்தேன்; சினிமா கம்பேக் இல்லை" - சொர்ணமால்யா| இப்ப என்ன பண்றாங்க பகுதி 2
ஒரு காலத்தில் ஸ்கிரீனில் பிஸியாக இருந்து ரசிகர்களாலும் கவனிக்கப்பட்டவங்க இவங்க. விரும்பி பிரேக் எடுத்தாங்களா சூழ்நிலையா தெரியாது. இப்போது மேக் அப் ஷூட்டிங் என எந்தப் பரபரப்புமின்றி இருக்கிறார்கள். ‘இப்ப என்ன பண்றாங்க?’ என இவர்களைத் தேடிப் பிடித்தோம். விகடன் டாட்.காமில் (vikatan.com) இனி ஒவ்வொரு வாரமும் செவ்வாய் கிழமை நீங்கள் இவர்கள் பற்றித் தெரிந்து கொள்ளலாம். இந்த வாரம் சொர்ணமால்யா

இளமை புதுமை
சன் டிவியின் ஆரம்பகால ஹிட் ஷோக்களில் ஒன்று ’இளமை புதுமை’. தொகுத்து வழங்கியவர் சொர்ணமால்யா. அப்போதெல்லாம் நிகழ்ச்சி பிடித்துப் பார்க்கிறார்களோ இல்லையோ, அதைத் தொகுத்து வழங்குபவர்களைப் பார்ப்பதற்காகவே சில நிகழ்ச்சிகள் கொண்டாடப்பட்டதெல்லாம் நடந்தது. 'இளமை புதுமை' ஷோவுக்கும் சொர்ணமால்யாவுக்காகவே நிறைய ரசிகர்கள்.
சமூக ஊடகங்கள் இல்லாத அந்தக் காலக்கட்டத்தில் பொது இடங்களுக்குச் சென்றால் சினிமா நட்சத்திரங்களுக்குக் கிடைத்த வரவேற்பு இவருக்குக் கிடைத்தது. இன்றைய 90ஸ் கிட்ஸ்களில் இவரைத் தெரியாதவர்களே இருக்க முடியாது.
இத்தனைக்கும் டிவிக்கு வந்தபோது கல்லூரிப் படிப்பைக் கூட முடிக்கவில்லை இவர். எனினும் கலகலப்பாகப் பேசி இவர் பண்ணிய ஆங்கரிங் பலருக்கும் பிடித்துப் போனது. அப்போதே சினிமா வாய்ப்புகளும் இவரைத் தேடி வரத் தொடங்கின.
ஆனாலும் செலக்ட் செய்தே சில படங்களில் நடித்தார். ‘அலை பாயுதே’, ‘மொழி’, ‘எங்கள் அண்ணா’ ஆகியவை இவர் நடித்த சில படங்கள்.
‘அன்னைக்கு இருந்த டிவி பிரபல்யத்தின் மூலமா நிறைய வாய்ப்புகள் வந்திருக்குமே, நீங்க பயன்படுத்திக் கொள்ளவில்லையா’ என சில மாதங்களுக்கு முன் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்த போது நாம் கேட்டதற்கு அவர் இப்படிப் பதில் தந்திருந்தார்..

அமெரிக்கப் பயணம்!
‘’டிவிக்கு வந்தது 16 வயசுலதான். ஆனா குழந்தையா இருந்த காலத்துல இருந்தே எனக்குப் பிடித்த ஒரு விஷயம் பரதநாட்டியம். ஒருகட்டத்துல அதுமேல ரொம்ப பிரியம் உண்டாக, அதுல பி.எச்.டி பண்ணலாம்னு அமெரிக்காவுக்கே போயிட்டேன்.
ஏன்னு தெரியல, டிவி சினிமா வாய்ப்புகளை ஒப்பிடறப்ப நடனத்துக்குதான் முன்னுரிமை தரத் தோணுச்சு. அதனால நிறைய படங்களைத் தவற விட்டிருக்கேன். நான் தவறவிட்ட பல படங்கள் மிகப்பெரிய அளவுல வெற்றி பெற்றதெல்லாம்கூட நடந்தது. ஒரு கட்டத்துல இனி இதுதான் நமக்கான பாதைனு மனம் தீர்மானமாச் சொல்ல, நடன நிகழ்ச்சிகள், நடனப் பயிற்சின்னு அந்தப் பாதையிலேயே பயணிச்சிட்டிருக்கேன்!
டான்ஸ் மட்டும்தான் என ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்த பிறகும்கூட அதிலும் பல புதுமைகளை அரங்கேற்றத் தவறவில்லை சொர்ணமால்யா.
‘நடன நிகழ்ச்சிகள் மற்றும் அவற்றின் பொருட்டு மேற்கொள்ளும் பயணங்களின் தொடர்ச்சியாக இவர் மனதில் இன்னொரு ஐடியா உதித்தது. ‘Textures of Traditions’ என்பதே அது.
இது இந்திய சங்கமம்
'அதாவது தமிழ்நாட்டுல சென்னை சங்கமம் கேள்விப்பட்டிருப்பீங்கதானே? தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்து அந்தந்தப் பகுதிகளில் பிரபலமான கலைகளை ஒரே மேடையில் நடத்திக் காட்டுகிற நிகழ்வு. கனிமொழி அக்கா முயற்சியில அறிமுகப்படுத்தப்பட்டப்ப இந்த நிகழ்ச்சி என்னை ரொம்பவே ஈர்த்துச்சு. சென்னையில் இந்த நிகழ்ச்சி நடந்தப்ப எல்லாம் ஒவ்வொரு இடமா தேடிப் போய் பார்த்து ரசிச்சேன். ஒரு மாநிலத்துக்குள்ளேயே வெவ்வேற கலைகள், பழக்க வழக்கங்கள்னு இருக்கிறப்ப பல கலாசாரங்களை உள்ளடக்கிய பரந்துபட்ட பண்பாட்டைக் கொண்ட இந்தியா முழுக்க இது மாதிரியான நிகழ்வுகள் நடந்தா எப்படியிருக்கும்னு நினைக்கத் தோணுச்சு. நானும் சில நண்பர்களும் கூடி இந்தவொரு மேடையை உருவாக்கினோம்.
இதுக்காக வடகிழக்கு மாநிலங்கள் உள்ளிட்ட மொத்த இந்தியாவையும் சுத்தி வந்திருக்கோம். கலை கலாசார நிகழ்ச்சிகளை மட்டுமே வெளிப்படுத்தற ஒரு மேடையா இந்த அமைப்பு இருந்திடக்கூடாதுன்னு அந்தக் கலையில் ஈடுபடுகிற கலைஞர்களின் வாழ்க்கைத் தர மேம்பாட்டுக்கும் நிகழ்ச்சியைப் பயன்படுத்தினோம்’’ என்கிறார்.
கலை முக்கியத்துவம் வாய்ந்த உள்ளூர் தயாரிப்புகள் ‘Textures of Traditions’ அமைப்பின் மேடைகளில் சந்தைப்படுத்தப்பட்டு அவற்றைத் தயாரிப்பவர்களின் பொருளாதாரம் முன்னேறவும் வழி வகை செய்யப்படுகிறதாம்.
மேற்சொன்ன இந்த அமைப்பின் மூலம் சில நிகழ்ச்சிகளை கடந்த மாதம் நடத்திய சொர்ணமால்யா சில தினங்களுக்கு முன் பாகிஸ்தானின் லாகூர் சென்று வந்திருக்கிறார்.
கம் பேக் சினிமா?
’இந்திய மாநிலங்கள் தாண்டி கலைக்காக வெளிநாடா’ என்றால், அதிலென்ன சந்தேகம்? கலைக்கு நாடு, மொழிங்கிற எல்லையேதும் கிடையாதே. லாகூர் விசிட்டும் மனதுக்கு ரொம்பவே நெகிழ்வா இருந்துச்சு. அந்த நாட்டு மக்கள் எங்க டீமுக்குக் கொடுத்த ஆதரவும் நிகழ்ச்சியின் மீதான அவங்க ஆர்வமும் வியப்பா இருந்தது. இந்த மாதிரியா ஆதரவுகள் தான் நம்மைத் தொடர்ந்து உத்வேகமா இயங்க வைக்குது’’ என்கிறார்.
அப்ப, இனி இந்தப் பாதை மட்டும்தானா சினிமா கம் பேக் எதுவும் நிகழ வாய்ப்பெல்லாம் இல்லையா’ என்றால், ‘நானும் அப்படிதான் நினைக்கிறேன், ஏன்னா, இந்தப் பயணம் தெளிவா போயிட்டிருக்கு. மனசுக்கு ரொம்பவே பிடிச்ச பயணமாகவும் இருக்கு. சினிமா மாதிரியான விஷயம் எனக்கு ரொம்பவே முக்கியமானதா இருந்தா அப்பவே அந்த ரூட்டைத் தேர்ந்தெடுத்திருக்க மாட்டேனா' என்கிறார்.

`‘Textures of Traditions’' அமைப்பின் விழாவுக்கு ஆளுங்கட்சி எம்.பி., எம்.எல்.ஏ. வை அழைத்திருந்தது குறித்துப் பேசியபோது, ‘வருங்காலத்தில் அரசியலில் ஈடுபட வாய்ப்பு இருக்கிறதா’ என்கிற கேள்வியையும் கேட்டோம். 'அரசியல் நம்ம வாழ்க்கையிலிருந்து பிரிக்க முடியாத ஒரு விஷயம். 'பன்முகத்தன்மை கொண்ட கலாசாரம் நம்முடையது'னு உரக்கப் பேசறேனே, இன்னைக்கு சூழல்ல இதுவே என்னைப் பொறுத்தவரை அரசியல்தான். நேரடியான வாக்கு அரசியலுக்கு வர்ற ஐடியா இப்போதைக்கு இல்லை. வருங்காலத்துல என்ன நடக்கும்னு யாருக்கும் தெரியுமா என்ன' என்கிறார்.