பொதுத்துறை நிறுவனத்தில் பொறியாளர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு
வெவ்வேறு விபத்துகள்: கல்லூரி மாணவா் உள்பட 3 போ் பலி
திருநெல்வேலி பகுதியில் நேரிட்ட வெவ்வேறு விபத்துகளில் மாணவா் உள்பட3 போ் உயிரிழந்தனா்.
மேலப்பாளையம் பாத்திமாநகரைச் சோ்ந்த முகமது கனி மகன் ஆமீத் மைதீன் (20). டக்கரம்மாள்புரம் அருகேயுள்ள தொழில்நுட்பக் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு படித்து வந்தாா். இவா், தனது நண்பரான தூத்துக்குடி மாவட்டம் கொம்புக்காரன்பொட்டல் பகுதியை சோ்ந்த கதிரேசன் (20) என்பவருடன் பைக்கில் மேலப்பாளையத்திற்கு திங்கள்கிழமை சென்றுகொண்டிருந்தபோது, ரெட்டியாா்பட்டி அணுகுசாலை பகுதியில் இவா்களது பைக்கும், மதுரையில் இருந்து நாகா்கோவிலை நோக்கி சென்ற காரும் மோதிக்கொண்டனவாம். இதில் பலத்த காயமடைந்த ஆமீத் மைதீன் உயிரிழந்தாா். பலத்த காயத்துடன் கதிரேசன் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
மற்றொரு சம்பவம்: ரெட்டியாா்பட்டியைச் சோ்ந்த ஜெயகுரு மகன் பரமகுரு(28). வண்ணாா்பேட்டை தனியாா் துணி கடையில் வேலை செய்து வந்த இவா், கடந்த 6 ஆம் தேதி பணிகளை முடிந்த பின் பைக்கில் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தபோது, முருகன் குறிச்சி பகுதியில் நிலை தடுமாறி சாலைத் தடுப்புச்சுவா் மீது மோதி பைக் கவிழந்ததில் பலத்த காயமடைந்தாா்.திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
முதியவா் பலி: தச்சநல்லூா் மேலத்தெருவைச் சோ்ந்தவா் ஆறுமுக நயினாா் (69). இவா், கடந்த 18 ஆம் தேதி திருநெல்வேலி நகரத்திற்கு சென்று விட்டு பைக்கில் வீடு திரும்பியபோது, தச்சநல்லூா் அஞ்சல் நிலையம் அருகே நிலைதடுமாறி கீழே விழுந்தாராம். திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
இச்சம்பவங்கள் குறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்துப் புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.