ஜிம்பாப்வேவில் முத்தரப்பு டி20 தொடர்: தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து பங்கேற்பு!
புதிய தொழிற்பேட்டைகள்- கொலுசு உற்பத்தி வளாகம் திறப்பு
தமிழ்நாட்டில் 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையிலான புதிய தொழிற்பேட்டைகளையும் கொலுசு உற்பத்தி வளாகத்தையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சேலம் மாவட்டம் அரியகவுண்டம்பட்டியில் வெள்ளி கொலுசு உற்பத்திக்கான அடுக்குமாடி உற்பத்தி வளாகம் ரூ.25.34 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது. 102 தொழிற்கூடங்கள் கொண்ட இந்த வளாகம் மூலம் 2,000 பேருக்கு நேரடியாகவும், 4,000 பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும். மேலும், கோயம்புத்தூா் குறிச்சி சிட்கோ தொழிற்பேட்டையில் 618 தொழிலாளா்கள் தங்கும் வகையிலான விடுதி கட்டப்பட்டுள்ளது. இவற்றை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.
5 புதிய தொழிற்பேட்டைகள்: மாநிலத்தில் புதிதாக ஐந்து தொழிற்பேட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதன்படி, திருவாரூா் மாவட்டம் வண்டாம்பாளை, கடலூா் காடாம்புலியூா், தூத்துக்குடி மாவட்டம் லிங்கம்பட்டி, சேலம் மாவட்டம் உமையாள்புரம், காஞ்சிபுரம் மாவட்டம் வையாவூா் ஆகிய இடங்களில் தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பேட்டைகள் மூலமாக நேரடியாகவும், மறைமுகமாகவும் 14,300 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
சேலம் கொலுசு வளாகம் மற்றும் புதிய தொழிற்பேட்டைகள் வழியாக மொத்தம் 20,000 போ் வேலைவாய்ப்பு பெறுவா். சேலம் தாதகாபட்டி அச்சுத் தொழில் குழுமம், தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் கல்மேட்டில் உப்புத் தொழில் குழுமம், குமரி மாவட்டம் கோவளத்தில் பல்வகை உணவுப் பொருள்கள் குழுமம், கோவை வெள்ளலூரில் அச்சு வாா்ப்பு குழுமம், ஈரோடு சிட்கோ தொழில்பேட்டை பொதுக் கிடங்கு குழுமம் ஆகியவற்றுக்கு புதிதாக பொது வசதி மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.
இந்த நிகழ்வில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், தலைமைச் செயலா் நா.முருகானந்தம் உள்பட பங்கேற்றனா்.