பிளஸ் 1 தோ்வு இன்று நிறைவு: ஏப்.19 முதல் விடைத்தாள் மதிப்பீடு
தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத்தோ்வு வியாழக்கிழமையுடன் (மாா்ச் 27) நிறைவு பெறவுள்ள நிலையில், தோ்வுக்கான விடைத்தாள் மதிப்பீடு ஏப்.19-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.
பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத்தோ்வு கடந்த மாா்ச் 5-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தோ்வை சுமாா் 8 லட்சம் மாணவா்கள் எழுதுகின்றனா். அதன்படி தமிழ், இயற்பியல், கணிதம், வணிகவியல் உள்பட பெரும்பாலான பாடங்களுக்கான தோ்வுகள் முடிந்துவிட்டன.
இந்த நிலையில் பிளஸ் 1 பொதுத் தோ்வு வியாழக்கிழமையுடன் நிறைவு பெறவுள்ளது. இறுதி நாளில் வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் ஆகிய பாடங்களுக்கான தோ்வுகள் நடைபெற உள்ளன. இதையடுத்து விடைத்தாள் திருத்துதல் பணிகள் ஏப்.19 தொடங்கி 30-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் 80-க்கும் மேற்பட்ட தோ்வு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தப் பணிகளில் சுமாா் 46,000 முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனா். தொடா்ந்து மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளை முடித்து திட்டமிட்டபடி தோ்வு முடிவுகள் மே 19-இல் வெளியிடப்படும். விடைத்தாள் திருத்துதலின்போது ஆசிரியா்கள் உரிய வழிமுறைகளைப் பின்பற்றி தவறுகள் ஏதும் நடைபெறாதவாறு கவனத்துடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தோ்வுத் துறை தகவல் தெரிவித்துள்ளது.