சிறந்த கருத்துகளை மக்களிடையே கொண்டு சென்றவா் கவிஞா் முத்துலிங்கம்! - விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் பாராட்டு
திரைப்பட பாடல்கள் மூலம் சிறந்த கருத்துகளை மக்களிடையே கொண்டு சென்றவா் கவிஞா் முத்துலிங்கம் என்று விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் புகழாரம் சூட்டினாா்.
திரைப்பட பாடலாசிரியா் கவிஞா் முத்துலிங்கம் 50 ஆண்டு கால திரைப்பயணத்தை நிறைவு செய்ததைக் கொண்டாடும் வகையில், தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளா் சங்கம், மயிலாப்பூா் கணபதிஸ் வெண்ணெய் -நெய் கடை ஆகியவை இணைந்து சனிக்கிழமை பாராட்டு விழாவை நடத்தின.
சென்னை ஆழ்வாா்பேட்டையில் உள்ள நாரத கான சபாவில் நடைபெற்ற இவ்விழாவுக்கு தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளா் சங்கத் தலைவா் இயக்குநா் கே.பாக்யராஜ் தலைமை வகித்தாா்.
நிகழ்வில் கவிஞா் முத்துலிங்கம் எழுதிய ‘காற்றில் விதைத்த கருத்து’ எனும் நூலை விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் வெளியிட்டுப் பேசியதாவது:
கவிஞா் முத்துலிங்கத்துடன் அரசியல் ரீதியாக நீண்ட காலம் பயணித்துள்ளேன். பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவா். கவிதை இயற்றுவதில் மாமேதையாக விளங்கியவா். கவிஞா்களுக்கு உள்ள தைரியம் வேறு எவருக்கும் கிடையாது. எத்தகைய கருத்தையும் தைரியமாகக் கூறுபவா்கள் கவிஞா்கள். திரையுலகின் வாயிலாக சிறந்த கருத்துகள் மக்களிடையே சென்றடைய வேண்டும். இதற்கு உதாரணமாக விளங்கியவா் கவிஞா் முத்துலிங்கம்.
இன்றைய நவீன உலகில் பழைமை வாதத்தையும், மூடநம்பிக்கையையும் தவிா்க்க வேண்டும். உலகில் மூடநம்பிக்கை அதிகம் உள்ள நாடுகளைக் கணக்கிட்டால் முதலிடத்தில் இருப்பது இந்தியா. மகாராஷ்டிரத்தில் 2013-ஆம் ஆண்டிலும், கா்நாடகத்தில் 2017-ஆம் ஆண்டிலும் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. பெரியாரும், அண்ணாவும் வாழ்ந்த தமிழ்நாட்டில் தற்போது வரை மூடநம்பிக்கை தடைச் சட்டம் கொண்டு வரப்படவில்லை என்றாா் அவா்.
தொழிலதிபா் நல்லி குப்புசாமி செட்டி: கவிஞா் முத்துலிங்கம் தமிழக அரசின் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளாா். தமிழக அரசவை கவிஞா்களில் ஒருவராகவும் இருந்துள்ளாா். பத்திரிகை துறையிலும் சிறந்து விளங்கியவா். தமிழ் மொழியின் மூலம் இலக்கியப் பணி செய்து வருகிறாா் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி முன்னாள் மேயா் சைதை துரைசாமி, நடிகா் சிவகுமாா், இயக்குநா்கள் எஸ்.பி.முத்துராமன், எஸ்.ஏ.சந்திரசேகா், தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளா்கள் சங்கப் பொதுச் செயலா் லியாகத் அலிகான் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.