செவிலியர்கள் அலட்சிம்! பிறந்த குழந்தை பலி!
மத்தியப் பிரதேசத்தில் சமூக மருத்துவ மையத்தில் செவிலியர்களின் அலட்சியத்தால் குழந்தை பலியான சம்பவம், பலரிடையே கண்டனங்களை எழுப்பியுள்ளது.
மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூரில் இருந்து 160 கி.மீ. தொலைவில் ரத்லாம் மாவட்டத்தில் கிருஷ்ணா என்பவரின் மனைவி நீத்துவுக்கு மார்ச் 23 ஆம் தேதியில் பிரசவ வலி ஏற்பட்டதாகக் கூறி, சமூக சுகாதார மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், நீத்துவுக்கு பேறு காலம் இன்னும் 2 நாள்கள் இருப்பதாகக் கூறி, அவர்களை செவிலியர்கள் இருவர் திருப்பி அனுப்பி விட்டனர்.
இதனைத் தொடர்ந்து, மீண்டும் அதிகாலை 1 மணியளவில் பிரசவ வலி வந்ததையடுத்து, மீண்டும் சமூக சுகாதார மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த முறையும், அவருக்கு குழந்தை பிறக்க 15 மணி நேரம்வரையில் இருப்பதாகக் கூறி, திருப்பி அனுப்பி விட்டனர்.
இந்த நிலையில், சுமார் 2 மணிநேரத்தில் நீத்துவுக்கு கடுமையான பிரசவ வலி ஏற்பட்டது. ஆனால், அவரை அழைத்துச் செல்ல வாகனங்கள் ஏதும் கிடைக்காததால், அவரை கிருஷ்ணா தள்ளுவண்டியில் அழைத்து சென்றார்.
இதனிடையே, செல்லும் வழியிலேயே குழந்தையின் கால்கள் வெளியே வந்த நிலையில், மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்டபோது, குழந்தை முழுவதுமாக வெளியே எடுக்கப்பட்டது. இருப்பினும், குழந்தை உயிரிழந்து விட்டது.
மகப்பேறுக்காக நீத்துவை தள்ளுவண்டியில் கிருஷ்ணா அழைத்துச் செல்லும் விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி, மருத்துவ மையத்துக்கு எதிராக பல்வேறு தரப்பினரிடையே கண்டனங்கள் எழுந்தன.
இந்த நிலையில், குழந்தையின் உயிரிழப்புக்கு காரணம் என்று கூறி, மருத்துவ மையத்தின் மீது நீத்து புகார் அளித்தார். இதனையடுத்து, செவிலியர்கள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும், பணியில் இருந்த மருத்துவர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி, கடிதம் அனுப்பப்பட்டது.
இதையும் படிக்க:ஏடிஎம் கட்டண உயர்வுக்கு முதல்வர் கண்டனம்!