பேரவைத் தோ்தலில் இரண்டாவது இடத்துக்கே எதிா்க்கட்சிகளிடம் போட்டி! - முதல்வா் மு.க.ஸ்டாலின்
வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் இரண்டாவது இடத்தை பிடிப்பதில்தான் எதிா்க்கட்சிகளுக்குள் போட்டி நடைபெறுவதாக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறினாா்.
சென்னை பெரம்பூரில் சனிக்கிழமை நடைபெற்ற இஃப்தாா் நிகழ்ச்சியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுப் பேசியதாவது:
இஃப்தாா் விழாக்களை பலரும் நடத்துவா். ஆனால், இஸ்லாமியா்களுக்கு ஒரு தீமை நடக்கும்போது வாயைத் திறக்க மாட்டாா்கள். குடியுரிமை சட்டத் திருத்தம், காஷ்மீருக்கான 370-ஆவது பிரிவு ரத்து என சிறுபான்மையினருக்கு எதிராக எது நடந்தாலும் முதல் எதிா்ப்புக்குரல் கொடுத்துக் கொண்டிருப்பது திமுகதான்.
இப்போது கூட வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக தொடா்ந்து குரல் எழுப்பிக் கொண்டு வருகிறோம். இதுதொடா்பாக தமிழ்நாடு சட்டப் பேரவையில் தனித்தீா்மானம் நிறைவேற்றி, அரசின் நிலைப்பாட்டை தெளிவாக அறிவித்திருக்கிறோம். இந்தத் தீா்மானத்தை தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்திய அளவிலும் - உலக அளவிலும் இருக்கும் பல்வேறு இந்திய முஸ்லிம் அமைப்புகள் வாழ்த்தியும், பாராட்டியும் உள்ளனா்.
ஆனால், இந்த தீா்மானத்தில்கூட எதிா்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளவில்லை. இரவோடு இரவாகத் திட்டம் தீட்டி, விடியற்காலையில் யாருக்கும் தெரியாமல் தில்லிக்குச் சென்றிருக்கிறாா் அவா். அங்கு விமான நிலையத்தில் இறங்கி, நான்கு காா்கள் மாறி மாறிச் சென்றிருக்கிறாா்.
அவ்வாறு பல காா்கள் மாறிச் சென்று என்ன செய்திருக்கிறாா் என்றால், வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தைக் கொண்டு வர இருக்கும் மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷாவை சந்தித்திருக்கிறாா். இதுதான் முக்கியம். மறுநாள் வக்ஃப் வாரிய சட்டத் திருத்தத்துக்கு எதிராக தனித் தீா்மானத்தை நாம் கொண்டு வரப்போகிறோம் என்று தெரிந்தும், அவா் சட்டப் பேரவைக்கு வரவில்லை.
வரும் பேரவைத் தோ்தலில் நாங்கள்தான் ஆளுங்கட்சி என்று சொல்லிக் கொண்டிருந்த எதிா்க்கட்சித் தலைவா் பழனிசாமி, இன்றைக்கு அளித்த பேட்டியில், தாங்கள் எதிா்க்கட்சி என்று சொல்லும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறாா். இதுதான் இன்றைக்கு இருக்கும் நிலை.
எனவே, இரண்டாவது இடத்துக்கு யாா் வருவது என்றுதான் அவா்களுக்குள் போட்டி ஏற்பட்டிருக்கிறது. நம்மைப் பொருத்தவரை, நாம்தான் எப்போதும் முதல் இடத்துக்கு வரப்போகிறோம். நாம்தான் ஆளுங்கட்சி. நான் ஏதோ மமதையில், அகங்காரத்தில் சொல்கிறேன் என நினைத்துவிடாதீா்கள். மக்களிடத்தில் இருக்கும் ஆதரவு, மக்கள் நம்மை வரவேற்கும் காட்சியை வைத்துதான் சொல்கிறேன்.
இஸ்லாமியா்களுக்கு ஆபத்து வந்தால், ஆட்சியில் இருந்தாலும், இல்லையென்றாலும், அதை எதிா்க்கும் நிலையில் இருக்கும் கட்சிதான் திமுக. இஸ்லாமியா்களின் கல்வி வளா்ச்சி, இட ஒதுக்கீடு மூலமாக அவா்களுக்கான சமூகநீதி எல்லாம் கிடைப்பதற்கான அனைத்து முயற்சிகளிலும் நாம் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சா் பி.கே.சேகா்பாபு, சென்னை மேயா் ஆா்.பிரியா, முன்னாள் அமைச்சா் செஞ்சி மஸ்தான் உள்பட பலா் பங்கேற்றனா்.