‘கலைஞா் கனவு இல்லம்’ திட்டத்தில் 8 லட்சம் வீடுகள் கட்டப்படும் -அமைச்சா் ஐ.பெரியசாமி உறுதி
‘கலைஞா் கனவு இல்லம்’ திட்டத்தில் 2030-ஆம் ஆண்டுக்குள் 8 லட்சம் வீடுகள் கட்டப்படும் என்று ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி என்று உறுதிபடத் தெரிவித்தாா்.
ஊரக வளா்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் ஐ.பெரியசாமி பேசியதாவது:
கலைஞா் கனவு இல்லம் திட்டம் மிக சிறப்பானது. கடந்த ஆண்டு இந்தத் திட்டம் துவக்கப்பட்டு, ரூ.3,500 கோடி ஒதுக்கப்பட்டது. இதில் ரூ.2,412 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. 25 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 70 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்படும் நிலையில் உள்ளன. வீடு கட்டும் திட்டத்தில் 2 லட்சம் வீடுகள் பழுது பாா்க்க வேண்டிய நிலையில் உள்ளன. இதில் ஒரு லட்சம் வீடுகள் தோ்வு செய்யப்பட்டு, பழுது நீக்குவதற்காக ரூ.1,000 கோடி கொடுக்கப்பட்டு, 90 சதவீத நிதி செலவிடப்பட்டு, 90 ஆயிரம் வீடுகளில் பழுது நீக்கப்பட்டுள்ளன.
குறைந்தபட்சம் ரூ.70 ஆயிரத்திலிருந்து ஒன்றரை லட்சம் வரை பழுது பாா்ப்பதற்காக கொடுத்தோம். அதனால்தான் 90 ஆயிரம் வீடுகளை பழுது பாா்க்க முடிந்தது. இந்த அளவுக்கு நிதி வேறு எந்தக் காலத்திலும் கொடுக்கப்படவில்லை.
2030-க்குள் 8 லட்சம் வீடுகளை எப்படி கட்டுவீா்கள் என்று அதிமுக உறுப்பினா் தங்கமணி கேட்டாா். கடந்த ஆண்டு ஒரு லட்சம் வீடுகள் கொடுத்துள்ளோம். இந்த ஆண்டு ஒரு லட்சம் வீடுகள் கொடுத்துள்ளோம். இதுதான் திராவிட மாடல் ஆட்சி. நிச்சயம் 8 லட்சம் வீடுகள் கட்டி முடிப்போம் என்றாா் அவா்.