காட்சிகளில் பிரம்மாண்டம்.. ஆனால்! எம்புரான் - திரை விமர்சனம்!
நடிகர் மோகன்லால் - பிருத்விராஜ் கூட்டணியில் உருவான எம்புரான் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
லூசிஃபரில் அரசியல்வாதியாகக் காட்டப்படும் மோகன்லால் (ஸ்டீபன் நெடும்பள்ளி) கட்சித் தலைவரும் மாநில முதல்வருமான பி.கே. ராமதாஸ் மறைவுக்குப் பின் கேரளத்தின் முதல்வராக ஜித்தின் ராமதாஸை (டொவினோ தாமஸ்) உருவாக்கி கேரளத்தைவிட்டு வெளியேறி கிளைமேக்ஸில் குரேஷி ஆபிரஹாம் என்கிற டான்னாக தன்னை அடையாளப்படுத்துவதுடன் கதை முடிந்திருக்கும். இதன் இரண்டாம் பாகமான எம்புரான், உண்மையில் குரேஷி ஆபிரஹாம் என்பவர் யார்? என்பதை விரிவாக பேச முயற்சித்திருக்கிறது.
எம்புரான் துவக்கக் காட்சியில் வடமாநிலத்தைச் சேர்ந்த சில இஸ்லாமியர்கள் மதக்கலவரத்தால் பாதிக்கப்பட்டு ஒரு ஹிந்து மாளிகையில் தஞ்சம் அடைகின்றனர். அங்கு பாதுகாப்பாக இருக்கலாம் என நினைப்பவர்களுக்கு பெரிய கொடூரம் நிகழ்கிறது. அச்சம்பவத்தில் ஒரு இஸ்லாமிய சிறுவன் மட்டும் உயிருடன் தப்பிக்கிறான்.
கட் செய்தால் கேரளத்தை ஆண்டுகொண்டிருக்கும் ஜித்தின் (டொவினோ) தன் கட்சியிலிருந்து விலகி புதிய கட்சியை ஆரம்பிக்க உள்ளதாகத் தெரிவிப்பதுடன் மத சித்தாந்தம் கொண்ட தேசிய கட்சியுடன் கூட்டணியில் இணைவதை அறிவிக்கிறார். இப்போது,பிகே ராமதாஸ் கட்சியினர் கொந்தளிக்க, யார் இருந்தால் இந்தக் குழப்பங்கள் தீரும் என யோசிக்கின்றனர். அதற்கான ஒரே ஆள் ஸ்டீபன் நெடும்பள்ளி! ஸ்டீபனாக அறியப்பட்ட குரேஷி ஆபிரஹாம் எங்கிருக்கிறார்? என்ன செய்துகொண்டிருக்கிறார்? திரும்பி கேரளத்திற்கு வந்து அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தினாரா? என்பதே எம்புரானின் கதை.
இயக்குநர் பிருத்விராஜ் மலையாள சினிமாவின் தரத்தை உச்சத்திற்குக் கொண்டு செல்ல ஒவ்வொரு காட்சியிலும் முயன்றிருப்பது நன்றாகத் தெரிகிறது. படத்தின் ஆரம்பக் காட்சிகளைப் பார்க்கும் எவரும் ஹாலிவுட் படமா? என்றே நினைப்பார்கள். அந்த அளவிற்கு ஒளிப்பதிவு மற்றும் காட்சிகளை எடுத்த விதம் என பிருத்விராஜ் ஆச்சரியப்பட வைத்திருக்கிறார்.

படத்தின் அரசியல் வசனங்கள் மற்றும் தமிழுக்கு ஏற்ப டப்பிங் செய்யப்பட்ட பணிகளும் சிறப்பாக இருந்தன. லூசிஃபரை பார்க்காவிட்டாலும் படம் புரியும் வகையில் இருப்பதும் நன்று. ஆனால், லூசிஃபரில் இருந்த பரபரப்பு, அழுத்தமான கதாபாத்திர வடிவமைப்புகள் இப்படத்தில் கொஞ்சம் குறைந்திருக்கிறது.
நல்ல அறிமுக காட்சி, காட்டிற்குள் ஒரு சண்டைக்காட்சி என ரசிகர்களைக் கவர்ந்தாலும் எம்புரானில் மோகன்லாலின் பங்கு குறைவாகத்தான் இருக்கின்றன. படம் ஆரம்பித்து 50 நிமிடம் கழித்தே மோகன்லால் அறிமுகமாகிறார். அதுவரை, டொவினோ மற்றும் மஞ்சுவாரியருக்கான காட்சிகள்தான். பின், இரண்டாம்பாதியில் கிளைமேக்ஸ் சண்டைக்காட்சியில் மோகன்லால் டச் இருக்கிறது. மற்றபடி கதையின் நாயகனாக ஆபிரஹாம் எங்கிருக்கிறார்? என்ன செய்கிறார் என்பதை மேலோட்டான காட்சிகள் வழியே காண்பிக்கின்றனர். அதுவும் எதிர்பார்த்தபடி அமையவில்லை.
ஸ்டீபன் நெடும்பள்ளியாகவும் குரேஷி ஆபிரஹாமாகவும் மோகன்லால் தன் நடிப்பில் முழுமையைக் கொடுத்திருக்கிறார். எந்த இடத்திலும் தொடர்ச்சி அறுபடாத நடிப்பாகவும் இருக்கிறது. டொவினோ மற்றும் மஞ்சுவாரியருக்கான காட்சிகள் இவர்களுக்கு இடையேயான அரசியல் என எம்புரானில் சிறப்பான பங்களிப்பை இருவரும் செய்திருக்கின்றனர்.
குறிப்பாக, மஞ்சுவாரியர் முழு அரசியல்வாதியாகவே தன்னை மாற்றியதில் கைதட்டல் பெறுகிறார். நடிகர்கள் பிருத்விராஜ், அபிமன்யு சிங், சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் வெளிநாட்டு நடிகர்கள் என படத்தில் அதிக கதாபாத்திரங்கள் இருக்கின்றன. அனைவரும் தங்களுகான காட்சிகளை சரியாகக் கையாண்டுள்ளனர்.

எம்புரான் லூசிஃபர் அளவிற்கு அழுத்தமான படமாக இல்லையென்றாலும் மலையாள சினிமாவின் முதல் பிரம்மாண்ட திரைப்படம் என்கிற பெயரைப் பெறும். வெளிநாட்டு படப்பிடிப்புகள், சண்டைக்காட்சிகளின் ஒளிப்பதிவு தரம் என பிருத்விராஜ் மலையாள சினிமாவிற்கு புதிய மைல்கல்லைக் கொடுத்திருக்கிறார்.
அதேபோல் ஈராக் உள்ளிட்ட வெளிநாட்டு காட்சிகளை மிகுந்த கவனத்துடன் பிருத்விராஜ் எடுத்திருக்கிறார். குண்டு வெடிக்கும் காட்சிகள், மோகன்லாலின் அறிமுகத்திற்கான சண்டைக்காட்சி என மலையாள சினிமாவின் அபாரமான வளர்ச்சி பல இடங்களில் தெரிகின்றன.
இனி மலையாளத்தில் உருவாகும் பெரிய வணிக படங்கள் எம்புரானை முறியடிக்க வேண்டும் என்கிற எல்லையை வைப்பார்கள். கமர்சியல் படமாக இருந்தாலும் அதில் இன்று பேசப்பட வேண்டிய அரசியலைப் பதிவு செய்திருப்பதற்காக படத்தின் கதை, திரைக்கதை எழுத்தாளரான முரளி கோபிக்கு பாராட்டுகள். ஆனால், கதையின் உச்சம் எங்கெல்லம் நிகழ்கிறதே உடனே அடுத்த காட்சியின் குறைவான தாக்கம் எம்புரானை பலவீனப்படுத்துகிறது. திரைக்கதையில் முரளி கோபி இன்னும் கவனம் செலுத்தியிருந்தால் எம்புரான் மிகப்பெரிய வணிக வெற்றியை நோக்கியும் நகர்ந்திருக்கும்.
ஒளிப்பதிவாளர் சுஜித் வாசுதேவ், இசையமைப்பாளர் தீபக் தேவ் ஆகியோரின் பணிகள் படத்தின் தரத்திற்கு கூடுதல் பலத்தை அளித்துள்ளன. வனத்தில் நடக்கும் சண்டைக்காட்சி மற்றும் சில முக்கிய காட்சிகளில் எடிட்டிங் நன்றாக இருந்தன.
சில குறைகள் இருந்தாலும் கதையாக படம் பெரிதாக சோர்வை அளிக்கவில்லை. சண்டைக்காட்சிகள், சாமானியர்களுடன் அரசியல்வாதிகள் கைகோர்க்க வேண்டிய தேவை என எம்புரான் சில திரையனுபவங்களைக் கொடுக்கிறது. எதிர்பார்ப்புகள் இல்லாமல் செல்வபர்களுக்கு படம் கூடுதலாக பிடிக்கவும் வாய்ப்புண்டு. மூன்றாம் பாகத்திற்கான லீடிங் இருப்பதால் படம் முடிந்ததும் வெளியேறாமல் அமர்ந்திருங்கள்; மோகன்லாலுக்கு மிக நெருக்கமான ஒருவர் சிறப்பு தோற்றத்தில் வருகிறார்!
இதையும் படிக்க: வீர தீர சூரன் படத்தை வெளியிட அனுமதி!