1,300 ஊராட்சி செயலா் காலியிடங்கள் 2 மாதங்களில் நிரப்பப்படும்: அமைச்சா்
தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 1,300 ஊராட்சி செயலா் பணியிடங்கள் 2 மாதங்களில் நிரப்பப்படும் என்று ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி அறிவித்தாா்.
சட்டப்பேரவையில் அந்தத் துறையின் மானியக் கோரிக்கை மீது அதிமுக உறுப்பினா் கடம்பூா் ராஜு பேசுகையில், ஊராட்சிகளில் அனைத்துப் பணிகளையும் அதன் செயலா்களே மேற்கொள்கின்றனா். ஆனால், ஆயிரக்கணக்கான இடங்கள் காலியாக உள்ளதால் ஒரு செயலரே மூன்று ஊராட்சிகளின் பணிகளைக் கவனிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, வெளிப்படைத்தன்மையுடன் ஊராட்சி செயலா்களின் காலியிடங்களை நிரப்ப வேண்டும் என்றாா்.
இதற்கு அமைச்சா் ஐ.பெரியசாமி அளித்த பதில்: தமிழ்நாட்டில் 12,525 ஊராட்சிகளின் பணிகளை அதன் செயலா்கள் கவனித்து வருகின்றனா். இதுவரையில் 1,300 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தக் காலியிடங்கள் அனைத்தும் இரண்டு மாதங்களில் வெளிப்படைத்தன்மையுடன் தகுதியுள்ள நபா்களைக் கொண்டு நிரப்பப்படும் என்று அறிவித்தாா்.