சென்ட்ரல் - ஆவடி நள்ளிரவு புறநகா் மின்சார ரயில் மாா்ச் 28 வரை ரத்து
மதுரை: இயக்குநர் வீட்டில் களவு; `5 நாள்களாகியும் விசாரணை இல்லை...' - காவல்துறை மீது குற்றச்சாட்டு!
எழுத்தாளரும் இயக்குநருமான லக்ஷ்மி சரவணக்குமார் தனது வீட்டில் பணம், நகை திருடப்பட்டுவிட்டதாகவும், அது குறித்து புகார் அளிக்கப்பட்டும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
தனியாக வாழும் தன்னுடைய அம்மாவின் பாதுகாப்பு பற்றி கவலை எழுவதாகவும், எந்தவித பாதுகாப்பும் இல்லாத சமூகத்தில் வாழ்வது வருத்தமளிப்பதாகவும் கூறியுள்ளார்.
"நீதியின் விலை என்ன?" என்ற தலைப்பில் இது குறித்து பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில், ``தயக்கங்களுக்கும் யோசனைகளுக்கும் பின்பே இதனை எழுதுகிறேன். எனது தாயார் சிகிச்சைக்காக சென்னை வந்து பத்து நாள்கள் தங்கியிருந்துவிட்டு கடந்த வியாழன் இரவு மீண்டும் எனது ஊரான மதுரை மாவட்டம், திருமங்கலத்திற்குச் சென்றார்.

அதிகாலை வீட்டிற்குச் சென்றவருக்கு அதிர்ச்சி. வீட்டுக் கதவு உடைக்கப்படாமல் கள்ளசாவி போட்டு திறக்கப்பட்டு மிக சிறிய அளவில் பணமும் மிக மிக சிறிய அளவில் நகையும் திருடு போயிருந்தது. (ஏனெனில் எந்தப் பெரிய சேமிப்பும் எங்களிடமில்லை.)
களவு போனது போனதுதான் அதை ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் பாதுகாப்பு கருதி காவல்துறையில் ஒரு புகார் அளிக்கச் சொல்லி எனது தாயாரிடம் சொல்ல... அவர் எனது மாமாவோடு சென்று ஒரு புகாரும் தந்தார். வழி செலவுக்காக 1000 ரூபாய் வாங்கிக்கொண்டு காவல்துறையினர் அன்று மாலை வந்து விசாரிப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள்.
ஆனால் வரவில்லை. போன் அடித்துக் கேட்டால் எங்களுக்கு வேற வேலை இல்லயா? நாளைக்கு வருவோம் என்று பதில்.
ஒரு பணக்காரன் வீட்டில் கொள்ளை போயிருந்தால்...
அடுத்த நாள் வரவில்லை. போன் அடித்தால் அதே கடுப்பான பதில்... ஐந்து நாட்கள் கடந்துவிட்டன. இன்று வரையிலும் எந்த விசாரணையும் இல்லை. இதற்கிடையில் அதே தெருவிலிருக்கும் இப்னொரு வீட்டைச் சேர்ந்தவர் எனது தாயாரை தேடி வந்து பேசியிருக்கிறார். பக்கத்து ஏரியாவில் அவரது மகன் குடும்பத்தோடு வசிக்கிறார்.
ஒரு மாதத்திற்கு முன்னால் இதே போல் அவர்கள் வீட்டிலும் திருட்டு. கொஞ்சம் கூடுதலான தொகை கொஞ்சம் கூடுதலான நகை. போலீஸ்காரர்களுக்கும் கொஞ்சம் கூடுதலாக செலவு செய்தும் இன்றுவரை விசாரணை இல்லை.

ஐயா களவு போனது ஒரு ரூபாயகக்கூட இருக்கட்டுமே, இன்னொருவர் வீட்டுக் கதவை உடைத்துச் செல்வதன் மூலமாக அச்சத்தை உருவாக்குவது குற்றமில்லையா? சிறிய குற்றங்கள் ஏன் பொருட்படுத்தத் தகுந்தவையாக இருப்பதில்லை. இதே ஒரு பணக்காரன் வீட்டில் கொள்ளை போயிருந்தால் காவல்துறை இத்தனை அசட்டையாக நடந்துகொள்ளுமா? புகார் கொடுக்க வருகிறவர்களை குற்றவாளிகளைப் போல் நடத்துமா?
சாதாரண மனிதர்களுக்கு பாதுகாப்பு இல்லை
எனது கவலை தொலைந்துபோன பொருளின் மீதில்லை. எந்தவிதமான பாதுகாப்பும் இல்லாத சமூகத்தில் வாழ்கிறோம் என்பதுதான். எனது தாயார் தனியாக வசிக்கிறார். இதேபோல் இன்னொருமுறை திருடர் வரமாட்டார் என்பது என்ன நிச்சயம்? காவல்துறை கண்டுகொள்ளவில்லை என்பது கண்கூடாக தெரியும் திருடருக்கு தொடர்ந்து திருட துணிச்சல் தானே வரும். திருட்டின் போது முதியவர்களின் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளில் கொலை செய்யப்பட்டவர்களைக் குறித்து ஏராளமான செய்திகளில் வாசிக்கிற எனக்கு என்னவிதமான அச்சங்கள் வரக்கூடுமென நீங்கள் புரிந்து கொள்ளலாம்.
ஒரு எழுத்தாளனாக திரைப்பட இயக்குநராக எனது தொடர்புகளை பயன்படுத்தி உடனடியாக இதனை விசாரித்துவிட முடியும். ஆனால் எழுதப்படிக்கத் தெரியாத தனித்து வாழும் ஒரு முதியவர் தனக்கொரு பிரச்சனையென காவல்துறையினையோ சட்டத்தையோ அணுகினால் உண்மையாகவே நீதியும் பாதுகாப்பும் கிடைக்குமா என தெரிந்துகொள்ளவே காத்திருந்தேன். சாதாரண மனிதர்களின் உடமைக்கோ உயிருக்கோ எந்தவிதமான பாதுகாப்பும் இங்கில்லை என்கிற உண்மையை இன்று மீண்டும் புரிந்து கொண்டேன்.
சார்ந்தோருக்கு நன்றி" என எழுதியுள்ளார்.
லக்ஷ்மி சரவணக்குமார் முன்னணி இயக்குநர்களின் திரைப்படங்களில் வசன கர்த்தாவாக, உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். தற்போது கதிர், திவ்யபாரதி நடிக்கும் லிங்கம் இணைய தொடரை இயக்கியுள்ளார்.