காதலனுடன் சேர திட்டம்; திருமணமான இரண்டு வாரங்களில் கணவனை ஆள்வைத்து கொன்ற மனைவி! - சிக்கியது எப்படி?
உத்தரப்பிரதேச மாநிலம், அவுரையா என்ற இடத்தை சேர்ந்த திலிப் என்பவர் பிரகதி (22) என்ற பெண்ணை கடந்த 5ம் தேதிதான் திருமணம் செய்து கொண்டார். ஆனால் ஒரு மாதத்திற்குள் அதாவது கடந்த 19ம் தேதி திலிப் அங்குள்ள ஒரு இடத்தில் துப்பாக்கி காயத்துடன் கிடந்தார்.
அவரை உறவினர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். இரண்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிறகும் நிலைமை மோசம் அடைந்ததால், அங்கிருந்து மத்தியப் பிரதேச மாநிலம், குவாலியர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கிருந்து அவுரையாவிற்கு மீண்டும் கொண்டு வரப்பட்டார். ஆனால் அவ்வளவு முயற்சி செய்தும் அவர் இறந்து போனார். இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து திலிப்பை அடித்து உதைத்து துப்பாக்கியால் சுட்ட 3 பேர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் விசாரித்தபோது இக்கொலையில் திலிப் மனைவிக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. திலிப் மனைவி பிரகதியை பிடித்து விசாரித்தபோது, பிரகதி திருமணத்திற்கு முன்பு நான்கு ஆண்டுகள் அனுராக் என்பவரை காதலித்து வந்துள்ளார். அவர்களது காதலுக்கு பிரகதியின் பெற்றோர் சம்மதிக்காமல் அவரை திலிப்பிற்கு திருமணம் செய்து வைத்தனர். திருமணத்திற்கு பிறகு இருவரும் சந்தித்து பேசிக்கொள்ள முடியவில்லை. இதையடுத்து பிரகதியும், அனுராக்கும் சேர்ந்து திலிப்பை கொலை செய்ய முடிவு செய்து ராம்ஜி என்ற கூலியாளை இதற்காக நியமித்தனர். இக்கொலைக்காக ரூ.2 லட்சம் பணம் கொடுத்துள்ளனர். ராம்ஜி தனது அடியாட்களுடன் திலிப்பை பைக்கில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்று அடித்தும், துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்துள்ளார் என்று போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக பிரகதி மற்றும் அவரது காதலனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.