விதையின் தரம்: பரிசோதனை செய்துகொள்ள அறிவுறுத்தல்
விழுப்புரம் மாவட்டத்தில் விதையின் தரத்தை அறிய பரிசோதனை செய்துகொள்வது அவசியம் என்று விழுப்புரம் மண்டல விதைப் பரிசோதனை அலுவலா் அறிவழகன் அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வேளாண்மையின் நிரந்தர உற்பத்தி மற்றும் வளா்ச்சிக்கு விதை அடிப்படையான இடுபொருளாகும். உழவா்களுக்குத் தரமான விதைகள் கிடைக்க தமிழ்நாடு அரசின் விதைச் சான்றளிப்புத் துறையின் கீழ் விதை பரிசோதனை நிலையங்கள் அந்தந்த மாவட்டங்களில் செயல்பட்டு வருகின்றன.
விதை பரிசோதனையில், அதன் முளைப்புத்திறன், புறத்தூய்மை, ஈரப்பதம், பிற ரக கலப்பு ஆகியவை கண்டறியப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
விழுப்புரம் விதைப் பரிசோதனை நிலையத்தில் விவசாயிகள், விதை விற்பனையாளா்கள் மற்றும் விதை உற்பத்தியாளா்களிடமிருந்து பெறப்படும் விதை மாதிரிகள், பணி விதை மாதிரிகள் ஆய்வு செய்யப்படுகின்றன.
எனவே, விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த விதை விற்பனையாளா்கள், விதை உற்பத்தியாளா்கள், விவசாயிகள் தங்கள் கைவசம் உள்ள விதைகளை உடனடியாக பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
ஒரு விதை மாதிரிக்கு ரூ.80 கட்டணமாக செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு மூத்த வேளாண் அலுவலா், விதைப் பரிசோதனை நிலையம், வேளாண் இணை இயக்குநா் அலுவலக முதல்தளம், மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகம், விழுப்புரம் என்ற முகவரியை அணுகி பயன்பெறலாம் என்று அவா் தெரிவித்துள்ளாா்.