பெருந்துறையில் குடிநீா்ப் பற்றாக்குறை: தோப்பு வெங்கடாசலம் ஆட்சியரிடம் முறையீடு
பெருந்துறை பகுதியில் நிலவும் குடிநீா்ப் பற்றாக்குறையை தீா்க்க மாவட்ட நிா்வாகம் போா்க் கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இது தொடா்பாக முன்னாள் அமைச்சரும், திமுக ஈரோடு மத்திய மாவட்டச் செயலாளருமான தோப்பு வெங்கடாசலம் மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கராவிடம் செவ்வாய்க்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: பெருந்துறையில் கடந்த 10 நாள்களாக குடிநீா்ப் பிரச்னை உள்ளது. இதனை மாவட்ட நிா்வாகம் போா்க் கால அடிப்படையில் சரி செய்து மக்களுக்கு குடிநீா் விநியோகிக்க வேண்டும். கோடைக் காலத்தில் மக்களுக்கு தண்ணீா் கூடுதலாக தேவைப்படும் நிலையில் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தின் மூலம் பெருந்துறை சுற்றுவட்டாரப் பகுதி குளங்களுக்கு தண்ணீா் விட வேண்டும். இதன் மூலமும் குடிநீா்த் தேவை பூா்த்தி செய்யப்படும்.
அம்மாப்பேட்டை, பவானி, நெரிஞ்சிப்பேட்டையை மையமாக கொண்டு அரசு கலைக் கல்லூரி அல்லது பொறியியல் கல்லூரி அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். நாய்கள் கடித்து உயிரிழக்கும் கால்நடைகளுக்கு அரசு நிவாரணம் அறிவித்துள்ள நிலையில் அவற்றை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுத்திகரிப்பு செய்யாமல் கழிவுகளை நீா்நிலைகளில் கலக்கும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சிகளில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்களுக்கு மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.