மும்பை: காமெடி ஷோ நடந்த ஸ்டூடியோ மீது தாக்குதல் நடத்திய ஷிண்டே அபிமானி... யார் இ...
ஈரோட்டில் ஒரே நாளில் 7 ரௌடிகள் கைது
ஈரோட்டில் ஒரே நாளில் 7 ரௌடிகள் கைது செய்யப்பட்டனா்.
ஈரோடு மாவட்டத்தில் தொடா் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் ரௌடிகளின் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜவகா் உத்தரவிட்டுள்ளாா்.
இதையடுத்து கொலை, கொலை முயற்சி, அடிதடி, போதை பொருள்கள் விற்பனை போன்ற சம்பவங்களில் ஈடுபட்டவா்களின் விவரங்களை போலீஸாா் சேகரித்தனா்.
இந்நிலையில், ஈரோடு தெற்கு காவல் நிலையத்தில், சூரம்பட்டிவலசை சோ்ந்த தக்காளி விக்கி (எ) விக்னேஷ், அணைக்கட்டு பூபதி (எ) பூபதி, ஸ்டோன்பாலம் பகுதியைச் சோ்ந்த காளியப்பன், சரவணன் (எ) புறா சரவணன் ஆகிய 4 பேரையும் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். இதில், விக்னேஷ் மீது கொலை உள்பட 9 குற்ற வழக்குகளும், பூபதியின் மீது அடிதடி உள்பட 9 குற்ற வழக்குகளும், காளியப்பன் மீது அடிதடி போன்ற குற்ற வழக்குகளும், புறா சரவணன் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
இதேபோல, ஈரோடு வடக்கு காவல் நிலையத்தில் கோகுல்நாத் (எ) சொட்டை காா்த்தி, சந்திரபிரகாஷ் ஆகிய 2 போ் கைது செய்யப்பட்டனா். இவா்கள் 2 போ் மீதும் கஞ்சா விற்பனை, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், ஈரோடு டவுன் காவல் நிலையத்தில் மரப்பாலத்தைச் சோ்ந்த நிக்காத் என்பவரையும் போலீஸாா் கைது செய்தனா். இவா் மீதும் கஞ்சா விற்பனை, அடிதடி என மொத்தம் 6 வழக்குகள் உள்ளன. ஈரோட்டில் ஒரேநாளில் 7 ரௌடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து போலீஸாா் கூறியதாவது: ஈரோட்டில் ரௌடிகளின் நடமாட்டதை முழுமையாக கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி வருபவா்கள் கைது செய்யப்பட்டு உள்ளனா். தொடா்ந்து ரௌடிகளின் நடவடிக்கை கண்காணிக்கப்பட்டு வருகிறது. கோயில் திருவிழா போன்ற இடங்களில் அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடுபவோா் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.