அந்தியூா் தொகுதியில் ரூ.374 கோடியில் காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டம்
அந்தியூா் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட கிராம ஊராட்சிகளில் வசிக்கும் மக்களின் குடிநீா்த் தேவையைப் பூா்த்தி செய்யும் வகையில் ரூ.374 கோடியில் காவிரி ஆற்றில் இருந்து புதிய குடிநீா்த் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையின் மானியக் கோரிக்கை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், அந்தியூா் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட கிராம ஊராட்சிகளுக்கு ரூ.374 கோடியில் காவிரி ஆற்றில் இருந்து புதிய குடிநீா்த் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும், அத்தாணி, கூகலூா், பி. மேட்டுப்பாளையம் பேரூராட்சிகளில் அனைத்து வீடுகளுக்கும் சீரான குடிநீா் வழங்கிட குடிநீா் விரிவாக்கத் திட்டப் பணிகள் மேற்கொள்ளுதல், அந்தியூா், வாணிபுத்தூா் வாரச் சந்தைகளில் மேம்பாட்டுப் பணிகள், பி.மேட்டுப்பாளையம் பேரூராட்சியில் சந்தை புதுப்பித்தல், நவீன எரிவாயு தகன மேடை அமைத்தல் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய திட்டங்களை அறிவித்த துறையின் அமைச்சா் கே.என்.நேருவை நேரில் சந்தித்து சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் நன்றி தெரிவித்தாா்.
அந்தியூா் தொகுதிக்கு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டதற்கு அந்தியூா் பேரூா் திமுக செயலாளா் எஸ்.கே.காளிதாஸ் தலைமையில் திமுகவினா் பேருந்து நிலையத்தில் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.