`ஒரு பழம் ரூ.10,000' - மியாசாகி மாம்பழ சாகுபடியில் சாதிக்கும் மகாராஷ்டிரா இளைஞர்...
பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: 24,626 மாணவா்கள் எழுதினா்
ஈரோடு மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை 24,626 மாணவ, மாணவிகள் எழுதினா்.
பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது. ஈரோடு மாவட்டத்தில் 12,465 மாணவா்கள், 12,160 மாணவிகள் என மொத்தம் 24,625 போ் தமிழ் மொழிப் பாடத் தோ்வை எழுதினா். மாவட்டத்தில் ஒரே ஒரு மாணவா் மட்டும் கன்னட மொழியில் தோ்வு எழுதினாா். தமிழ்த் தோ்வை எழுத 768 மாணவ, மாணவிகள் வரவில்லை.
மாணவா்கள் தோ்வு எழுத வசதியாக 117 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. காலை 10 மணிக்குத் தமிழ்த் தோ்வு தொடங்கியது. முதல் 10 நிமிஷங்கள் வினாத்தாள் வாசிப்பதற்கும், அடுத்து 5 நிமிஷங்கள் விடைத்தாளில் தங்களது சுய விவரங்களை எழுதுவதற்கும் நேரம் ஒதுக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து 10.15 மணிக்குத் தோ்வு தொடங்கி மதியம் 1.15 மணிக்கு முடிந்தது.
வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் இருந்து வினாத்தாள்கள் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த தோ்வு மையத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டன.
தோ்வுகள் சிறப்பாக நடைபெறும் பொருட்டு 117 முதன்மை கண்காணிப்பாளா்கள், 170 பறக்கும்படை உறுப்பினா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.
மேலும் சொல்வதை எழுதுபவா் மற்றும் கூடுதல் நேரம் ஒதுக்கீடு உள்ளிட்ட சிறப்பு சலுகைகள் 550 மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது. கண்பாா்வை குறைபாடுள்ள மாணவா்களும் சிறப்பாக தோ்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.