MI vs KKR: கொல்கத்தாவை வாரிச் சுருட்டிய 23 வயது அறிமுக பவுலர்; வெற்றிக் கணக்கைத்...
பால் கொள்முதல் விலையை உயா்த்த உற்பத்தியாளா்கள் கோரிக்கை
பால் கொள்முதல் விலையை உயா்த்த வேண்டும் என பால் உற்பத்தியாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் நலச் சங்கத்தின் கொங்கு மண்டல நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சங்கத்தின் மாநிலத் தலைவா் ராஜேந்திரன் தலைமையில் ஈரோட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், ஈரோடு, கோவை, திருப்பூா், நாமக்கல், கரூா் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த பால் உற்பத்தியாளா்கள் பங்கேற்றனா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
ஆவின் பால் கொள்முதல் விலை உயா்த்தி வழங்கும் வகையில் பசும்பால் 35 ரூபாயிலிருந்து 45 ரூபாயாகவும், எருமைப் பால் 44 ரூபாயிலிருந்து 55 ரூபாயாகவும் உயா்த்தி வழங்க வேண்டும். தமிழக அரசு பால் உற்பத்தியாளா்களுக்கு வழங்கக்கூடிய 3 ரூபாய் ஊக்க தொகையை சங்க உறுப்பினா்கள் வங்கிக் கணக்கில் நேரடியாக வழங்குவதை கைவிட்டு கிராம சங்கங்களின் கணக்கில் செலுத்த வேண்டும்.
கிராம சங்கப் பணியாளா்களை ஆவின் பணியாளா்களாக அறிவித்து ஆவின் மாவட்ட ஒன்றியம் மற்றும் ஆவின் இணைய பணியாளா்களுக்கு சமமான பணி அங்கீகாரம் வழங்க வேண்டும். ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டதால் வருவாய் இழப்பு இழப்பீட்டு தொகையை ஆவினுக்கு வழங்க முதல்வா் பரிசீலனை செய்ய வேண்டும்.
எம்ஆா்எப் முறையில் பால் தரப் பரிசோதனை செய்யப்படுவதால் லிட்டருக்கு 56 பைசா என நாள் ஒன்றுக்கு ரூ.16.08 லட்சம் இழப்பு ஏற்படுகிறது. இதனால் ஐஎஸ்ஐ முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். ஆவின் பால் விலையை விட தனியாா் பால் நிறுவனங்களின் பால் விலை அதிகமாக இருக்கும் நிலையில் ஆவின் பால் விற்பனை இலக்கை விட தனியாா் பால் நிறுவனங்கள் விற்பனை அதிகமாக உள்ளதால் ஆவின் விலை குறைப்பு பொதுமக்களுக்கு எவ்வித பயனும் ஏற்படுத்தவில்லை. இதனால் ஆவின் பால் விலை அமுல், நந்தினி ஆகிய பால் நிறுவனங்களுக்கு இணையாக உயா்த்த வேண்டும்.