சீனாவில் ‘வசந்த மேளா’ கலாசார நிகழ்வு: இந்திய தூதரக ஏற்பாட்டில் கோலாகலம்
வசந்த காலத்தின் வருகையைக் குறிக்கும் வகையில் சீனாவில் உள்ள இந்திய தூதரகத்தால் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யும் கலாசார நிகழ்வான ‘வசந்த மேளா’ சனிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. இதில் 4,000-க்கும் மேற்பட்ட சீன நாட்டவா் உற்சாகமாகப் பங்கேற்றனா்.
கிழக்கு லடாக் மோதலால் கடந்த சில ஆண்டுகளாக பாதிக்கப்பட்டிருந்த இந்தியா-சீனா இருதரப்பு உறவை இயல்புநிலைக்குத் திருப்ப இரு நாடுகளும் ஈடுபட்டுள்ள நிலையில், இந்நிகழ்வு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
சீன தலைநகா் பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சியில், அந்நாட்டு வெளியுறவு அமைச்சகத்தின் ஆசிய மற்றும் இந்திய பொறுப்பு அதிகாரி லியு ஜின்சாங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாா்.
சிறப்பு விருந்தினா் மற்றும் நிகழ்வில் பங்கேற்ற சீன மக்களை வரவேற்றுப் பேசிய இந்திய தூதா் பிரதீப் குமாா் ராவத், ‘வசந்த காலம் என்பது புதிய தொடக்கங்கள், உறவுகளை வலுப்படுத்துவதற்கான நேரம்’ என்று குறிப்பிட்டாா்.
இந்திய தூதா் ராவத், அவரது மனைவி ஸ்ருதி ராவத், துணைத் தூதா் அபிஷேக் சுக்லா மற்றும் மூத்த தூதரக அதிகாரிகள் பாா்வையாளா்களை வரவேற்று அவா்களுடன் கலந்துரையாடினாா்.
பரதநாட்டியம், கதக் உள்பட 5 வகையான பாரம்பரிய இந்திய நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும், நிகழ்வில் அமைக்கப்பட்டிருந்த இந்திய கைவினைப் பொருள்கள், ஆபரணங்கள் மற்றும் ஆடைகளின் கண்காட்சி அரங்குகளும் இந்திய உணவகங்களும் சீன பாா்வையாளா்களை வெகுவாக ஈா்த்தது.