பாகிஸ்தான் ஒருநாள் தொடர்: வில்லியம்சன், ரச்சின் உள்பட 5 பேருக்கு அணியில் இடமில்ல...
சனிப்பெயர்ச்சி 2025 விருச்சிகம் : பணம் வரும்; ஆனால் இது முக்கியம் - என்னனென்ன பலன்கள் உங்களுக்கு?
திருக்கணிதப்படி வரும் மார்ச் 29.3.25 அன்று கும்பத்திலிருந்து மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார் சனிபகவான். விருச்சிக ராசிக்கு 5-ம் இடத்தில் அமர்ந்து பலன் தரப்போகிறார். இந்த சனிப் பெயர்ச்சியில், உங்களுக்கு ஓரளவு பணவரவு உண்டாகும். குடும்பத்தினருடன் அமர்ந்து சிரித்துப் பேசி மகிழக் கூடிய இனிய நிலை உருவாகும்.
விருச்சிக ராசிக்காரர்களுக்கான 15 பலன்கள்:
1. சனி பகவான் 5-ம் இடத்தில் அமர்ந்து பலன் தரப் போகிறார். அர்த்தாஷ்டமச் சனி விலகுகிறது. ஆகவே, பூர்வீகச் சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். நிலம், மனை சார்ந்த வழக்குகள் உங்களுக்குச் சாதகம் ஆகும். எனினும் எல்லா விஷயங்களிலும் சற்றுக் கவனம் அவசியம்.
2. இந்த வருடம் குருப்பெயர்ச்சியும் ராகு-கேது பெயர்ச்சியும் நிகழவுள்ளன. இந்த கோள்களின் சாரங்களால் பொருளாதாரச் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆகவே, பணவரவு வரும் வேளையில் இயன்றளவு சேமித்து வையுங்கள்.
3. இந்தச் சனிப்பெயர்ச்சி காலத்தில் கல்லூரி மாணவ மாணவிகள் கல்வியிலும், வேலைக்குச் செல்வோர் பணியிலும் மிகவும் கவனமாக இருங்கள். எக்காரணம் கொண்டும் வேறு பணிக்குச் செல்லவேண்டாம்.
4. சுபச்செலவுகளுக்காக கடன் வாங்கினாலும் தகுதிக்குமேல் அதிகமாகக் கடன் வாங்கக்கூடாது. பெண்கள் சமையல் பணிகளில் கவனத்துடன் செயல்படுங்கள். சிலர், வீட்டைக் கட்டிமுடித்து கிரகப் பிரவேசம் கோலாகலமாகச் செய்வீர்கள். வேறுசிலர், புதிய சொத்து வாங்குவீர்கள். வாகன வசதி பெருகும்.

5. குடும்பத்தில், கணவன் மனைவிக்குள் சச்சரவுகள் விலகும்; சந்தோஷம் பெருகும். சிலருக்குப் பிள்ளை வரம் கிடைக்கும். கர்ப்பிணிகள் தொலைதூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளின் எண்ணங்களுக்கு மதிப்புகொடுங்கள். சில நேரங்களில் எதிர்மறை எண்ணங்கள் உருவாகும். யோகா, தியானம் மூலம் சரிசெய்து கொள்ளுங்கள். ஆரோக்கியப் பிரச்னைகள் அனைத்தும் விலகும்.
6. இல்லத்தரசிகளே! குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். கணவர் உங்களின் வேலைகளைப் பகிர்ந்துகொள்வார். மாமியார், மாமனார் உங்களைப் பெருமை பேசுவார்கள். அலுவலகம் செல்லும் பெண்களே! வேலைச்சுமை, மன உளைச்சலிலிருந்து விடுபடுவீர்கள். ஓரளவு பணவரவு உண்டு. எனினும் அதைக் கையாள்வதில் ஜாக்கிரதையாக இருக்கவும்.
7. சனி பகவான் மீனத்தில் அமர்ந்தபடி, உங்கள் ராசிக்கு 2, 7 மற்றும் 11-ம் இடங்களைப் பார்க்கிறார். அவர் உங்களின் 2-ம் வீட்டைப் பார்ப்பதால் இடம்பொருள் ஏவல் அறிந்து பேசுவது நல்லது. கண்ணைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள். சிலநேரங்களில் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற முடியாமல் போகக்கூடும்.
8. சனிபகவான் உங்களின் 7-ம் வீட்டைப் பார்ப்பதால் மனைவிக்கு கை, கால் வலி, மரத்துப் போகுதல், மறதி வரக்கூடும். அவருடன் வீண் வாக்குவாதம் வேண்டாம். பிரச்னைகளைப் பேசிச் சரிசெய்யுங்கள்.
9. சனிபகவான் உங்களின் லாப வீட்டைப் பார்ப்பதால், நெடுநாள்களாக வரமாலிருந்த பணமெல்லாம் இனி கைக்கு வரும். சுபச்செலவுகள் தேடிவரும். சிலருக்கு ஆடை, ஆபரணச் சேர்க்கை நிகழும்.
10. நட்சத்திரப்படி பார்த்தோமானால், இந்த ராசியைச் சேர்ந்த விசாக நட்சத்திரக்காரர்களுக்கு மனரீதியான குழப்பங்கள் வரும். உடல்நிலை குறித்து அக்கறை எடுத்துக்கொள்ளுங்கள்.
11. அனுஷ நட்சத்திரக்காரர்கள் யாரையும் நம்பி முதலீடு செய்யவோ, ஜாமீன் போடவோ வேண்டாம். வேலை, வெளிநாட்டு வாய்ப்பு மற்றும் பொருளாதார விஷயங்களில் மற்றவர்களை நம்பி ஏமாற வேண்டாம்.

12. கேட்டை நட்சத்திரக்காரர்கள், நண்பர்களிடம் கவனமாக இருங்கள். கடனைத் தவிர்த்துவிடவும். கவனக்குறைவால் வேலையில் பாதிப்புகள் பிரச்னைகள் ஏற்படலாம். கவனம் தேவை.
13. விருச்சிக ராசியினர் வெளிநாட்டில் இருப்பீர்களேயானால், அங்கே வேலை மற்றும் வியாபாரத்தில் சிறு சிறு பிரச்னைகள் வரலாம். எனினும் சமாளித்து மீள்வீர்கள். 2026- மே மாதத்துக்குப் பிறகு நன்மைகள் நடக்கும். அதுவரையிலும் புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம்.
14. வியாபாரிகளே, பற்று வரவு உயரும். பழைய சரக்குகள் விற்றுத் தீரும். சிலர் சொந்த இடத்துக்கு, தொழில் ஸ்தானத்தை மாற்றும் வாய்ப்பு உண்டு. நிறுவனம் சார்பில், அன்னதானத்துக்கு இயன்ற பங்களிப்பைச் செய்யுங்கள். நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
15. உத்தியோகஸ்தர்களே, வேலைப்பளு குறையும். உங்களின் திறமை யைக் கண்டு அதிகாரிகள் வியப்பார்கள். நீங்கள் எதிர்பார்த்த பதவி-சம்பள உயர்வு, இந்த வருடத்தின் பிற்பகுதியில் கிடைக்க வாய்ப்பு உண்டு. சிலருக்கு டபுள் புரொமோஷன் வாய்ப்புகளும் உண்டு.