Shreyas Iyer : `சாய் சுதர்சனின் விக்கெட்டை எடுத்த ரகசியம் இதுதான்' - ஆட்டநாயகன் ...
சனிப்பெயர்ச்சி 2025 மீனம் : ஜென்மச் சனி என்ன செய்யும்? - சிக்கலற்ற விஷயங்கள் இவைதான்
திருக்கணிதப்படி வரும் மார்ச் 29.3.25 அன்று கும்பத்திலிருந்து மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார் சனிபகவான். மீன ராசிக்கு ஜென்மச் சனியாய் அமர்ந்து பலன் தரப்போகிறார். ஆகவே, ஒருவித பதற்றம் உங்களை ஆட்கொள்ளலாம். கவலை வேண்டாம். தெய்வத்துணை உங்களுக்குப் பக்கபலமாக இருக்கிறது!
மீன ராசிக்காரர்களுக்கான 15 பலன்கள்:
1. ஜன்மச் சனியின் காலத்தில் உங்களுக்குச் சவால்கள், சிற்சில சிரமங்கள் ஏற்பட்டாலும் அவை அனைத்தும் வாழ்வின் அர்த்தத்தைப் புரிய வைப்பதாக அமையும். உங்களின் அனுபவமும் ஆளுமையும் அதிகரிக்க வழி பிறக்கும்.
2. குடும்பத்தில், மனைவி வழியில் செலவுகள் வரும். உறவினர்கள், நண்பர்கள் சிலர் பணம் கேட்டுத் தொந்தரவு தருவார்கள். இளைய சகோதரரிடம் விட்டுக்கொடுத்து போவது நல்லது. பிள்ளைகளிடம் வாக்குவாதம் வேண்டாம். உறவுகளிடம் நிதானம் வேண்டும். பிள்ளைப் பேற்றுக்காக ஏங்குபவர்களுக்கு நல்லது நடக்கும்.
3. ஜென்மச் சனி என்பதால், உடல் ஆரோக்யத்தில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். முட்டிக்குக் கீழே காலில் பிரச்னைகள் வரவாய்ப்பு உண்டு. பல் சம்பந்தப்பட்ட விஷயத்திலும் கவனம் தேவை.
4. ஜன்மச் சனி என்றாலும் திருமணம் போன்ற சுபகாரியங்களில் தடைகள் இருக்காது. வீடு, வாகனம், நகைகள் வாங்குவதில் குறை இருக்காது. புது முதலீடுகளைச் செய்யலாம். திடீர்ப் பயணங்களால் வீண் அலைச்சல், டென்ஷன் ஏற்படும். சிலருக்கு அயல்நாடு செல்ல விசா கிடைக்கும்.

5. வங்கிக் கடனுதவியால் வீடு கட்டும் பணியைப் பூர்த்தி செய்வீர்கள். சொத்துப் பிரச்னைகளில் அவசரம் வேண்டாம். வழக்கறிஞரின் ஆலோசனையின்றி எந்த முடிவுகளும் எடுக்காதீர்கள். வி.ஐ.பிகளின் நட்பால் சில காரியங்களைச் சாதிப்பீர்கள்.
6. இந்த ராசியைச் சேர்ந்த பெண்களுக்கு மனஅழுத்தம் உருவாகும். நிறைய புண்ணிய தலங்களுக்குச் சென்று வழிபட்டு வாருங்கள் நிலைமை மாறும். ஆன்மிகப் பெரியவர்களைச் சந்திக்கும் வாய்ப்புகள் உண்டு. பழநி, திருப்பதி, பத்ரி, கேதார்நாத் போன்ற மலைத்தலங்களுக்குச் சென்று வருவது நல்லது.
7. மீன ராசி மாணவர்கள், படிப்பில் கவனத்தைச் சிதறவிடாதீர்கள். எனினும், போட்டிகள் - விளையாட்டுகளில் பதக்கம் பாராட்டு கிடைக்கும். புதன்கிழமைகளில் பெருமாளுக்கும் கருடனுக்கும் விளக்கேற்றி வழிபடலாம். வியாழக்கிழமைகளில் ஹயக்ரீவரை வணங்கி வழிபடலாம். இதனால் மேன்மை உண்டாகும்.
8. சனி பகவான் உங்களின் மூன்றாம் வீட்டைப் பார்ப்பதால் கௌரவ பதவி வரும். விலையுயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். சவால்களில் வெற்றி பெறுவீர்கள்.
9. சனி பகவான் உங்களின் ஏழாம் வீட்டைப் பார்ப்பதால் மனைவிக்குக் கால் வலி, கழுத்து வலி வந்து நீங்கும். வீட்டில் ஏற்படும் சிறு பிரச்னைகளைப் பெரிதுப்படுத்த வேண்டாம்.
10. சனி பகவான் உங்களின் பத்தாம் வீட்டைப் பார்ப்பதால் உத்தியோகத்தில் மரியாதை கூடும். சிலர் சுயதொழில் தொடங்க வாய்ப்பு உண்டாகும். புதிய வாய்ப்புகளும் கிடைக்கும்.
11. இந்த ராசியைச் சேர்ந்த பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள், தோல் மற்றும் பல் பிரச்னைகளால் பாதிக்கப்படலாம். உடனுக்குடன் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள்.

12. உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு காலில் பிரச்னை, பண விஷயத்தில் ஏமாற்றம் ஏற்படும். உடைமைகளைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளவும்.
13. ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு நிலம் தொடர்பாக பிரச்னைகள் வரும். தூக்கமின்மை, அச்ச உணர்வு ஏற்பட்டு விலகும்.
14. வியாபாரிகளே, தடாலடியாக சில மாற்றங்கள் செய்வீர்கள். பெரிய முதலீடுகள் செய்து மாட்டிக்கொள்ளாமல், சந்தை நிலவரங்களை அறிந்து செயல்படுவது நல்லது. வாடிக்கையாளர்களிடம் கனிவுடன் நடந்துகொள்ளுங்கள். எதிர்ப்பையும் தாண்டி லாபம் உயரும். எனினும் வியாபார கொடுக்கல், வாங்கலில் கவனமாக இருங்கள்.
15. உத்தியோகஸ்தர்களே, உங்களுக்கு வேலைச் சுமை அதிகரிக்கும். இதுவரையிலும் தொந்தரவு தந்து வந்த பழைய அதிகாரிகள் மாற்றலாகிச் செல்வார். புது அதிகாரியின் வரவால் உற்சாகம் அடைவீர்கள். அவர் உங்களுக்கு ஆதரவாகச் செயல்படுவார். பதவி-சம்பள உயர்வு உண்டு!