Shreyas Iyer : `சாய் சுதர்சனின் விக்கெட்டை எடுத்த ரகசியம் இதுதான்' - ஆட்டநாயகன் ...
சனிப்பெயர்ச்சி 2025 கடகம் : `வரப்போகும் நல்ல செய்தி' - இனி எப்படி இருக்கப்போகிறது?
திருக்கணிதப்படி வரும் மார்ச் 29.3.25 அன்று கும்பத்திலிருந்து மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார் சனிபகவான். கடக ராசிக்கு 9-ம் இடத்தில் அமர்ந்து பலன் தரப்போகிறார். அஷ்டமத்துச் சனி விலகப்போகிறது; இனி, உங்கள் கஷ்டமெல்லாம் நீங்கி நன்மைகள் அனைத்தும் நடக்கும். சாதிக்கும் நம்பிக்கை துளிர்விடும். சவால்களில் வெற்றி பெறுவீர்கள்.
கடக ராசிக்காரர்களுக்கான 15 பலன்கள்:
1. மார்ச்-29 முதல் சனி பகவான் 9-ம் வீட்டில் ஆட்சி பெற்று வலுவாக அமர்வதால், எல்லாவற்றிலும் முன்னிலை வகிப்பீர்கள். மனதில் நிம்மதியும் மகிழ்ச்சியும் பிறக்கும். விருப்பங்கள் நிறைவேற வாய்ப்புகள் பல உருவாகும்.
2. குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புகூடும். கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபங்கள் நீங்கும். இதுவரையிலும் ஏளனமாகவும், இழிவாகவும் திட்டியவர்கள் எல்லாம் இனி உங்களைப் பாராட்டுவார்கள். `சொந்த வீடு வாங்க வேண்டும்’ எனும் உங்களின் நீண்டகால லட்சியம் இப்போது நிறைவேற வாய்ப்பு கூடிவரும்.
3. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பங்காளிப் பிரச்னைகள் தீரும். எனினும், தந்தைக்கு உடல்நலப் பிரச்னைகள் வந்து நீங்கும். சகோதரர்கள் மூலம் சிற்சில விஷயங்களில் ஆதாயம் உண்டாகும். சுபச்செலவுகள் உண்டு. சிலர், கூட்டுக் குடும்பத்தை விட்டு, தனித்துக் குடியேற வாய்ப்பு உண்டு.
4. ராகு-கேது, குரு ஆகிய கிரங்களின் சாரங்கள் சற்று ஏற்றத் தாழ்வுகளை உண்டாக்கலாம். வீண் செலவுகள், சொந்தத்தில் பிரிவினை போன்ற பாதிப்புகள் வரும் என்றாலும், சனியின் அருளால் அனைத்தையும் சமாளிப்பீர்கள். சிரமங்கள் ஏற்பட்டாலும் நிறைவில் நன்மை நடக்கும். நம்பிக்கையோடு இருங்கள்.

5. பித்ருக்கள் ஆசியால் திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்கள் நல்லபடியாக நடைபெறும். சுபகாரியங்களில் இருந்துவந்த சிக்கல்கள் தீரும். மற்றவர் பிரச்னைகளில் தலையிடவேண்டாம்.
6. பொருளாதாரத்தில் சிக்கல் வரும் என்பதால் தேவையற்ற ஜாமீன், உத்திரவாதம் எதையும் தர வேண்டாம். அது உங்களுக்குப் பாதிப்பை உருவாக்கும். வலைதளங்களில் உருவாகும் நட்புக்களில் கவனம் தேவை.
7. பெண்களுக்குக் குடும்பத்தில் அன்பும் அக்கறையும் கிடைக்கும். நட்பு வகையிலும் ஒத்துழைப்பும் உதவியும் உண்டு. அதன் மூலம் சில காரியங்களை நல்லபடியே சாதிப்பீர்கள். இல்லத்தரசிகளே, தங்க ஆபரணங்களை வாங்கிச் சேர்ப்பீர்கள். புகுந்த வீட்டில் கருத்து மோதல்கள் நீங்கும். அலுவலகம் செல்லும் பெண்களே, உங்களுக்குப் பணி நிரந்தரம், ஊதிய உயர்வுகள் உண்டு.
8. சனி பகவான் மீனத்தில் இருந்தபடி, உங்கள் ராசிக்கு 3, 6 மற்றும் 11-ம் இடங்களைப் பார்க்கிறார். அவர் உங்களின் 3-ம் வீட்டைப் பார்ப்பதால் திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். அரசால் அனுகூலம் உண்டு. எதிர்பார்த்தபடி வீடு, வாகன வசதிகள் பெருகும்.
9. சனிபகவான் உங்களின் 6-ம் வீட்டைப் பார்ப்பதால் சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். மறைமுக எதிரிகளால் ஆதாயம் அடைவீர்கள்.
10. சனிபகவான் உங்களின் லாப வீட்டைப் பார்ப்பதால், எதிர்பாராத பண வரவு உண்டு. புதுச் சொத்து சேரும். நிலுவையிலிருந்த வழக்கு வெற்றியடையும்.
11. இந்த ராசியைச் சேர்ந்த புனர்பூச நட்சத்திரக்கார்களுக்குப் புதிய வேலை கிடைக்கும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். புதிய முயற்சிகளில் அலைச்சல் இருந்தாலும் நிறைவில் வெற்றி உண்டாகும்.

12. பூசம் நட்சத்திரக்காரர்களுக்கு அடிக்கடி சோம்பலும் சளிப்பும் வந்துபோகும்; கவனம் தேவை. எந்த விஷயத்தையும் தள்ளிப்போடாமல், வேலைகளைச் சேர்த்துவைக்காமல் உடனுக்குடன் செய்து முடியுங்கள். சில காரியங்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்கவேண்டாம்.
13. கடக ராசி- ஆயில்ய நட்சத்திரக்காரர்கள், ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும். பித்ரு ஆசிர்வாதத்தால், பெரிய பிரச்னைகள் எதுவும் உண்டாகாமல், ஓரளவு சிறப்பான காலமாகவே அமையும். எதிர்பார்த்த எல்லா நன்மைகளும் நடைபெறும்.
14. வியாபாரிகளே, புது சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். தடைப்பட்ட ஒப்பந்தங்கள் தேடி வரும். நல்ல வேலையாள்கள் அமைவார்கள். புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். கெமிக்கல், இரும்பு, பாசுமதி அரிசி, எண்ணெய் வகைகளால் லாபம் உண்டு.
15. உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைப் புரிந்துகொள்ளும் அதிகாரி வந்துசேர்வார். புது வாய்ப்புகள் தேடி வரும். தக்கபடி பயன்படுத்திக் கொள்ளுங்கள்!