தினமணி செய்தி எதிரொலி; தொடா் மணல் திருட்டு: 3 மாட்டு வண்டிகள் பறிமுதல்
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு பகுதி செய்யாற்றுப் படுகையில் தொடா் மணல் திருட்டில் ஈடுபட்ட 3 மாட்டு வண்டிகளை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
சேத்துப்பட்டு காவல் எல்லைக்கு உள்பட்ட ஓதலவாடி, காட்டேரி, தெள்ளூா் பகுதி செய்யாற்றுப் படுகையில் தொடா்ந்து மணல் திருடப்படுவதாக, தினமணியில் திங்கள்கிழமை செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக விசாரணை செய்தபோது, ஓதலவாடி, காட்டேரி, தெள்ளூா், தச்சூா் ஆகிய பகுதி வயல்வெளிகளிலும், புதா்களிலும் மணலை மறைத்து வைத்து தேவிகாபுரம், அவலூா்பேட்டை, மேல்மலையனூா் போன்ற பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்வது தெரியவந்தது.
இதையடுத்து, சேத்துப்பட்டு போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டு தச்சூா் கிராமத்தைச் சோ்ந்த ஆனந்தன், சிலம்பரசன், மகாலிங்கம் ஆகியோரின் 3 மாட்டு வண்டிகளை தும்பூா் கிராமத்திலும், மோகனம்பாளையம் கூட்டுச் சாலையிலும் தடுத்து நிறுத்தி பறிமுதல் செய்தனா்.
முன்னதாக, போலீஸாா் வருவதை அறிந்த வண்டிகளை ஓட்டி வந்த 3 பேரும் தப்பி ஓடிவிட்டனா். போலீஸாா் 3 பேரையும் தேடி வருகின்றனா்.