ஸ்ரேயாஷ் ஐயர்: பஞ்சாப் அணியின் புது வரலாற்றை எழுதப்போகும் ஸ்ரேயாஷ்; எப்படித் தெரியுமா?
பஞ்சாப் அணி இந்த சீசனை வெற்றியோடு தொடங்கியிருக்கிறது. 11 ரன்கள் வித்தியாசத்திலான வெற்றிதான்.
பொதுவாகப் பார்த்தால் அத்தனை முக்கியமான வெற்றியெல்லாம் இல்லை. இன்னும் சீசன் இருக்கிறது. இன்னும் போட்டிகள் இருக்கின்றன.

ஆனால், ஸ்ரேயாஷ் ஐயர் என்கிற அந்த அணியின் கேப்டன் செய்திருக்கும் விஷயங்களிலிருந்து பார்க்கும்போது, இந்த வெற்றி பஞ்சாப் அணியைப் புதிய பாதையில் அழைத்துச் செல்லப்போகும் வெற்றியாகத் தெரிகிறது.
காரணம், பேட்டிங்கின்போது கடைசி ஓவரில் சுயநலமாகத் தன்னுடைய சதத்தைப் பற்றி யோசிக்காமல் அணிக்காக அவர் யோசித்த விதம்.
19 வது ஓவரின் முடிவில் ஸ்ரேயாஷ் ஐயர் 97 ரன்களில் இருக்கிறார். கடைசி ஓவரில் எப்படியும் சதமடித்துவிடுவார் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தனர்.
பஞ்சாப் அணியின் பெவிலியன் ஸ்ரேயாஷ் ஐயரின் சதத்துக்கு Standing Ovation கொடுக்க தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.
ரிக்கி பாண்டிங் உட்பட அத்தனை பேர் முகத்திலும் ஸ்ரேயாஷின் சதத்தை நோக்கிய ஆர்வமும் எதிர்பார்ப்பும் மின்னியது.

ஆனால், அந்த ஓவரில் ஸ்ட்ரைக்கில் இருந்தது ஷஷாங்க் சிங். அவர் நன்றாக ஆடிக்கொண்டிருந்தார். ரஷீத் கானுக்கு எதிராகத் தொடர்ந்து இரண்டு சிக்சர்களை பறக்கவிட்டிருந்தார்.
சிராஜ் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தையும் பவுண்டரியாக்கினார். சரி, முதல் இரண்டு, மூன்று பந்துகளை ஆடிவிட்டு ஸ்ரேயாஷூக்கு ஸ்ட்ரைக் கொடுப்பார். அவர் சதமடிப்பார் என்பதுதான் அனைவரின் எண்ணமும்.
ஓவரின் கடைசிக்கு முந்தைய பந்து வரை ஸ்ரேயாஷூக்கு ஸ்ட்ரைக் கிடைக்கவில்லை. அத்தனை பேரின் புருவமும் கொஞ்சம் இறுகுகிறது. ஷஷாங்க் சிங் நன்றாகத்தான் ஆடுகிறார்.
ஆனாலும் இன்னொரு முனையில் சதத்துக்காக ஒரு வீரர் காத்திருக்கிறாரே. அவர் மீது கொஞ்சம்கூடப் பரிவு இல்லையா எனச் ஷஷாங்க் சிங்கைக் கேட்காத குறைதான்.
ஷஷாங்க் கடைசிக்கு முந்தைய பந்தையும் பவுண்டரி ஆக்கினார். கடைசிப் பந்தையும் பவுண்டரி ஆக்கினார். ஸ்ரேயாஷூக்கு கடைசி வரை ஸ்ட்ரைக் கிடைக்கவில்லை. 97 ரன்களில் நாட் அவுட்டாக பெவிலியனுக்கு சென்றார்.
இதைப்பற்றி ஸ்ரேயாஷூக்கு எந்த கவலையும் இருந்ததாகத் தெரியவில்லை. அவர் மகிழ்ச்சியாகத்தான் இருந்தார்.

சமூக வலைத்தளங்களில் சில ரசிகர்கள் ஷஷாங்கின் மீது கோபத்தை வெளிக்காட்டத் தொடங்கினார். ஆனால், உண்மையில் ஸ்ரேயாஷூக்கு வேண்டுமென்றே ஷஷாங்க் ஸ்ட்ரைக்கை கொடுக்காமல் இல்லை. கடைசி ஓவரில் களத்தில் நடந்ததே வேறு.
"என்னுடைய சதத்தைப் பற்றி யோசிக்காமல், பந்தைப் பார்த்து உன்னுடைய ஆட்டத்தை ஆடு" என ஸ்ரேயாஷ்தான் கடைசி ஓவருக்கு முன்பாக ஷஷாங்கிடம் சொல்லியிருக்கிறார். இன்னிங்ஸ் இடைவேளையில் ஷஷாங்க் கொடுத்த பேட்டியில் இதைக் குறிப்பிட்டிருந்தார்.
ஏனெனில், 18வது ஐ.பி.எல் சீசனில் பஞ்சாப் அணியின் 17 வது கேப்டன் ஸ்ரேயாஷ் ஐயர். இதுவரை அந்த அணி எங்கேயும் சீராகச் செயல்பட்டதே இல்லை.
சென்னைக்கு ஒரு பாணி, மும்பைக்கு ஒரு பாணி எனப் பல அணிகளுக்கும் தனித்துவமாக ஒரு பாணி இருக்கும். ஆனால், பஞ்சாபுக்கென ஒரு பாணியே கிடையாது.

அவர்கள் எல்லாவற்றையும் முயன்று மாற்றி மீண்டும் முயன்று மீண்டும் மாற்றித் தோற்றிருப்பார்கள். அணி நிர்வாகம் கேப்டன்களின் மீதும் கேப்டன்கள் வீரர்களின் மீதும் பெரும்பாலும் நம்பிக்கை காட்டியிருக்கமாட்டார்கள்.
அப்படியொரு சூழலே அந்த அணியிலிருந்ததில்லை. இதனாலேயே அந்த அணியில் ஒவ்வொரு வீரரும் துண்டு துண்டாகத் தனித்தனியாக நிற்பார்கள்.
தனித்தனியாக பேப்பரில் பார்த்தால் வலுவான வீரர்களாக இருப்பார்கள். ஆனால், களத்தில் ஒரு ஒருங்கிணைவு இருக்காது.
ஒன்றாகக் கூடி அணியாகச் செயல்படமாட்டார்கள். பஞ்சாபின் இந்த வரலாற்றைத்தான் ஸ்ரேயாஷ் உடைக்கப்போகிறார் என நினைக்கிறேன். அவர் கடைசி ஓவரில் எடுக்க மறுத்த ஸ்ட்ரைக்தான் அதற்கான அறிகுறி.
தனிப்பட்ட நலனுக்காக இல்லாமல், அணியின் நலனுக்காக எந்தவித ஈகோவும் இன்றி அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான் ஸ்ரேயாஷ் வேண்டுமென்றே எடுக்கத் தவறிய சதத்தின் மூலம் அணிக்குச் சொல்ல விரும்பும் மெசேஜ்.

17 ஆண்டுகளாக இருள் சூழ்ந்த பாதையில் மட்டுமே பயணித்துக் கொண்டிருந்த பஞ்சாபின் வழியில் ஸ்ரேயாஷின் மூலம் ஒரு ஒளி தெரிகிறது. அதைப் பின்பற்றி முன்னேற வேண்டியது ஒட்டுமொத்த அணியின் கடமை.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...