கருப்பசாமி பாண்டியன் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
சென்னை: முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் மறைவுக்கு, திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன். கருப்பசாமி பாண்டியன் அவர்கள் 1977-இல் ஆலங்குளம், 1980-இல் பாளையங்கோட்டை, 2006-இல் தென்காசி தொகுதிகளில் இருந்து சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணியாற்றியவர் ஆவார்.
நீண்டகாலம் அவையின் உறுப்பினராக இருந்த அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு, தமிழ்நாடு சட்டப்பேரவையில் உடனடியாக இரங்கல் தீர்மானம் கொண்டு வந்துள்ளோம்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், அரசியல் இயக்கங்களைச் சேர்ந்த நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
வைகோ இரங்கல்
மதிமுக பொதுச்செயலாளர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
கருப்பசாமி பாண்டியன் மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.
என் தம்பி கருப்பசாமி பாண்டியன் உருவம்தான் கருப்பு. உள்ளமோ வெள்ளை என்று மக்கள் திலகம் எம்ஜிஆரால் பாராட்டிப் போற்றப்பட்டவர்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், அரசியல் இயக்கங்களைச் சேர்ந்த நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என வைகோ கூறியுள்ளார்.