செய்திகள் :

Cristiano Ronaldo: 132 சர்வதேச வெற்றிகள்; கின்னஸ் சாதனை; 40 வயதிலும் நிற்காமல் சுழலும் கால்கள்

post image

சர்வதேச கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சர்வதேச போட்டிகளில் அதிக வெற்றிகளைக் குவித்த வீரராக கின்னஸ் ரெக்கார்டில் தனது பெயரைப் பதிவு செய்திருக்கிறார்.

2003-ல் தனது 18 வயதில் சர்வதேச போட்டியில் அறிமுகமான ரொனால்டோ, 2025-இல் தனது 40 வயதிலும் அந்த வேகம் குறையாமல் கிலியான் எம்பாப்பே போன்ற இளம் போட்டியாளர்களுக்கு சவாலளிக்கக்கூடியவராக விளையாடிக் கொண்டிருக்கிறார்.

போர்ச்சுகல் நாட்டின் பெயரைக் கால்பந்து உலகில் அனைவரையும் உச்சரிக்க வைத்த ரொனால்டோ, நடப்பு UEFA நேஷன்ஸ் லீக்கில் தனது தேசிய அணிக்கு இரண்டாவது கோப்பையை வென்று கொடுக்கத் தீவிரமாக விளையாடி வருகிறார்.

கிறிஸ்டியானோ ரொனால்டோ
கிறிஸ்டியானோ ரொனால்டோ

இந்த நிலையில், UEFA நேஷன்ஸ் லீக்கின் காலிறுதிச் சுற்றில் டென்மார்க்கை ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணி வீழ்த்தி செமி பைனலுக்கு முன்னேறியிருக்கிறது. மேலும், ரொனால்டோ இந்த வெற்றியின் மூலம் சர்வதேச போட்டிகளில் தனது 132-வது வெற்றியைப் பதிவுசெய்து, உலக அளவில் அதிக சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர் என்ற கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார்.

கிறிஸ்டியானோ ரொனால்டோ
கிறிஸ்டியானோ ரொனால்டோ

இந்தத் தொடரில், செமி பைனலில் ஜெர்மனியை எதிர்கொள்ளவிருக்கிறது போர்ச்சுகல். 22 ஆண்டுகளாக சர்வதேச கால்பந்து உலகில் படிப்படியாக உயர்ந்து உச்சத்தை அடைந்து 40 வயதில் நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கும் ரொனால்டோ, அடுத்தாண்டு நடைபெறும் FIFA கால்பந்து உலகக் கோப்பையில் கடைசியாக ஒருமுறை களமிறங்கி போர்ச்சுகலின் உலகக் கோப்பை கனவை நனவாக்குவர் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.