தொடர் கொலைகள் முதல் சவுக்கு சங்கர் விவகாரம் வரை; சட்ட ஒழுங்கை பாதுகாப்பதில் தடுமாறுகிறதா திமுக அரசு?
கிருஷ்ணகிரியில் இரண்டு முதியவர்கள், அவினாசியில் தம்பதி, பவானியில் முக்கியப் பிரமுகர், நெல்லையில் ஓய்வுபெற்ற எஸ்.ஐ ஜாகிர் உசேன், சேலத்தைச் சேர்ந்த ரௌடி ஜான், கரூரில் ரௌடி சந்தோஷ் எனக் கடந்த வாரத்தில் மட்டும் தமிழ்நாட்டை அதிரச் செய்த கொலைச் சம்பவங்கள் இவை.
இதில் எஸ்.ஐ ஜாகிர் உசேன் 'என் உயிருக்கு ஆபத்து இருக்கிறது' எனக் காவல்துறையில் புகார் அளித்ததற்குப் பிறகு கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவமும், பட்டப்பகலில் பரபரப்பான சாலையில் ரௌடி ஜான் காரில் வைத்து கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட வீடியோவும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அதேபோல, தூய்மைப் பணியாளர்கள் குறித்து அவதூறாக பேசியதாகக் கூறி நேற்று அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் வீட்டுக்குள் புகுந்த 50 பேர் கொண்ட கும்பல், அனைத்துப் பொருட்களின் மீதும் சாக்கடையையும், மலத்தையும் வீசியிருக்கிறார்கள்.
'தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு கேள்விக்குள்ளாகியிருக்கும் நிலையில், இந்தக் சம்பவங்களுக்கு பின்னணி என்னவாக இருந்தாலும் இதனை இரும்புக் கரம்கொண்டு அடக்கவேண்டிய இடத்தில் இருக்கும் முதல்வர் ஸ்டாலின் வேடிக்கைப்பார்க்கிறார். இது உளவுத்துறையின் தோல்வி' எனத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன.
குற்றவாளிகள் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கப்படுவார்கள் எனக் கூறிக் கொண்டிருக்கும்போதே...
இது தொடர்பாக சட்டமன்றத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ``மதுரையில் காவலர் சடலமாக மீட்பு, கோவையில் ஒருவர் எரித்து கொலை, சிவகங்கையில் ஒருவர் வெட்டிக் கொலை, ஈரோடு தேசிய நெடுஞ்சாலையில் காரில் வைத்து ஒருவரை வெட்டிக் கொன்றுள்ளனர். இப்படி ஒரே நாளில் 4 கொலைகள் நடந்துள்ளது.
சட்டப்பேரவையில் முதல்வர் இந்த ஆட்சியில் குற்றவாளிகள் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கப்படுவார்கள். யாரும் தப்ப முடியாது என்று சொல்லிக்கொண்டு இருந்தபோதே இந்த சம்பவங்கள் நடந்துள்ளது. தினசரி இது போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் அரங்கேறி வருகிறது" எனக் கடுமையாகப் பேசினார்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ``மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில், பட்டப் பகலில் நடைபெறும் பல கொலைகளைப் பார்க்கும்போது, வன்முறையாளர்களின் புகலிடம் தமிழ்நாடு என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. காவல்துறை இருக்கிறதா என்று சந்தேகப்படக்கூடிய அளவுக்கு தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுப் போய்விட்டது.
இந்த நிலைமை நீடித்தால் வன்முறையில் முதன்மை மாநிலம் தமிழகம்தான் என்ற பெருமையை தமிழகத்திற்கு தி.மு.க. அரசு தேடித் தரும் நாள் வெகு தூரத்தில் இல்லை." எனச் சாடியிருக்கிறார்.
சட்ட ஒழுங்கு சீர்கேட்டை மறைக்கவே... தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்!
'திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதற்கு பிந்தைய 4 ஆண்டுகளில் 6,597 படுகொலைகள் நடைபெற்றிருப்பதாக மாநில குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்திருக்கிறது' என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் புள்ளி விவரங்களுடன் களத்தில் இறங்கியிருக்கிறார்.
'தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளது. இதனை எல்லாம் மறைக்கத்தான் தொகுதி மறுசீரமைப்பு குறித்து பேசுகிறது தி.மு.க' என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும், பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜனும் குற்றம்சாட்டுகின்றனர். தமிழகத்தில் படுகொலைகள் நடக்காத நாட்களே இல்லை எனும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக அண்ணாமலை தெரிவித்திருக்கிறார்.
பழிக்குப்பழி நடைபெறும் கொலைச் சம்பவங்கள் குறைந்துள்ளன! - ஸ்டாலின்
தமிழ்நாட்டின் காவல்துறையையும், உளவுத்துறையையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு அளித்திருக்கும் பதிலில், ``தூத்துக்குடியில் நடந்த சம்பவம், சாத்தான்குளத்தில் நடந்த சம்பவம் போன்றவற்றையெல்லாம் நீங்கள் மறந்துவிடக் கூடாது. உங்களைப்போல டிவி-யை பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என்று சொல்வதற்கு நாங்கள் தயாராக இல்லை.
எனது தலைமையில் காவல்துறை குற்றச் சம்பவங்களைக் கையாள்வதிலும், தடுப்பதிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குற்றச் சம்பவங்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அ.தி.மு.க ஆட்சிக் காலத்தை ஒப்பிடுகையில் தி.மு.க ஆட்சியில் பழிக்குப்பழி நடைபெறும் கொலைச் சம்பவங்கள் குறைந்துள்ளன.
ஆனாலும், தி.மு.க ஆட்சியில் கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளது போல் தவறான தகவல்கள் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகின்றன. காவல்துறை சுதந்திரமாக செயல்படுகிறது. எந்தக் கட்சியினர் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து வருகிறது. குற்றப் பின்னணி உடையோரை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. பொதுமக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பை சிறப்பாக மேற்கொள்கிறது." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இதையெல்லாம் கட்டுப்படுத்த தவறிவிட்டார் ஸ்டாலின்! - வைகைச்செல்வன்
இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வைகைச் செல்வன் பேசியபோது, ``காவல்துறை அதிகாரி உயிரோடு எரிக்கப்படுகிறார். முன்னாள் முதல்வரின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி ஜாகிர் உசேன் வெட்டிக் கொல்லப்படுகிறார். ஈரோடில் மனைவி கண்முன்பே ரௌடி ஜான் கொலை, கோட்டூர்புரத்தில் வேறு ஒருவருக்கு பதிலாக சுக்குக்காபி சுரேஷ் என்பவரை வெட்டியிருக்கிறார்கள். இப்படியான சம்பவங்கள் தினந்தோறும் நடக்கின்றன. சட்டம் ஒழுங்கு சரிந்துகிடக்கிறது.
இதைத் தடுக்க வேண்டிய காவல்துறை வேடிக்கைப் பார்க்கிறது. முதல்வரும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. மக்களுக்கான பாதுகாப்பு குறைந்துகொண்டே வருகிறது. அச்சுறுத்தல் அதிகமாகிக்கொண்டே வருகிறது. சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் கொலைகள் அதிகமாக நடப்பதுபோன்ற பிம்பம் கட்டமைக்கப்படுகிறது என்கிறார். பட்டப்பகலில் நடக்கும் கொலை குறித்து எப்படி பிம்பம் கட்டமைக்க முடியும்.
ஏ.டி.ஜி.பி கல்பனா நாயர் தமிழக டிஜிபி-யிடம் 'என்னை உயிரோடு எரிக்க சதித் திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது' எனப் புகார் அளித்திருக்கிறார். காவல்துறை அதிகாரிகளுக்கே இங்கு பாதுகாப்பு இல்லை என்றால் மக்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும். அ.தி.மு.க ஆட்சி மட்டுமல்ல எல்லா ஆட்சியிலும் குற்றங்கள் நடக்கும். ஆனால், இந்த ஆட்சியைப் போல பட்டப்பகலில், இவ்வளவு துணிவுடன் நடக்கவில்லை.

மதுரையில் வெடிகுண்டு வீசி கொலை நடக்கிறது. உளவுத்துறை இதுகுறித்து எந்த எச்சரிக்கையும் கொடுக்கவில்லை. புதுக்கோட்டையில் மணல் கொள்ளையை எதிர்த்து களமாடிய ஜகபர் அலி, லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டிருக்கிறார். பொதுவாக மக்களுக்காக சேவை செய்யும் எந்த ஆர்வலருக்கும் இப்போது பாதுகாப்பு இல்லை. அதனால்தான் மக்கள் கொதிக்கிறார்கள்.
இன்னுமொரு காரணம் அடிக்கடி காவலர்கள் பணியிட மாற்றம். ஆனால், முதல்வரின் சக்தியை தாண்டி வேறொரு அதிகார மையத்திலிருந்து பணியிட மாற்றம் நடக்கிறது. அதனால், காவல்துறை மீது மக்களுக்கு நம்பிக்கை குறைகிறது. காவல்துறையும், திமுக-வை சேர்ந்தவர்களும் கைகோத்துக்கொண்டு பல செயல்களில் ஈடுபடுகிறார்கள். இதையெல்லாம் கட்டுப்படுத்த தவறிவிட்டார் முதல்வர் ஸ்டாலின்." என்றார் காட்டமாக.
திமுக ஆட்சியிலும் இப்படி நடப்பது கவலைதான்!
இது தொடர்பாக திமுக-வுடன் கூட்டணியில் இருக்கும் சி.பி.எம் கட்சியைச் சேர்ந்தவரும், சமூக ஆய்வாளருமான பேராசிரியர் அருணன் பேசியபோது, ``இதற்கு முன்பு அரசு அலுவலகங்களுக்கு வெளியே கொலைகள், கல்லூரி வளாகத்தில் பாலியல் அத்துமீறல்கள் நடந்தது. நீதிமன்ற வாசலில்கூட கொலை நடந்தது. இதையெல்லாம் ஏற்கெனவே எங்கள் கட்சி சார்பில் ஆளும் அரசுக்கு சுட்டிக் காண்பித்திருக்கிறோம். தோழமை கட்சியாக இருந்தாலும் நடக்கும் தவறுகளை சுட்டிக்காண்பிக்கத் தவறியதில்லை.

தற்போது நடந்துவரும் தொடர் கொலைகள் வருத்தமாக இருக்கிறது. 8 கோடி மக்கள் இருக்கும் ஒரு மாநிலத்தில் குற்றங்கள் நடப்பது தவிர்க்கமுடியாதது. இப்போது தி.மு.க-வை குறைக்கூறும் அ.தி.மு.க ஆட்சியில் இதைவிட அதிக குற்றங்கள் நடந்ததாக முதல்வரே சட்டமன்றத்தில் புள்ளிவிவரங்களுடன் பதிலளித்திருக்கிறார். ஒரு கொலை நடந்துவிட்டது என்றால், எந்தவித விருப்பு, வெறுப்புமின்றி சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்து, அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத்தரும் வகையில் வழக்கை நடத்த வேண்டும்.
அதுதான் குற்றங்களுக்குப் பிறகு அரசு செய்யவேண்டிய முக்கிய கடமையாக கருதுகிறோம். திருநெல்வேலியில் கொலை செய்யப்பட்ட முன்னாள் காவல்துறை அதிகாரி கொலை வழக்கில், அரசு உரிய பாதுகாப்பை வழங்கவில்லை என முதல்வரிடமே கூறினோம். அவரும் 'ஆம்... அவரின் புகார் குறித்த விசாரணை நடந்துகொண்டிருக்கும்போதே இந்தக் கொலை நடந்துவிட்டது' எனக் கூறினார். அவருக்கு பாதுகாப்பு அளிக்காத அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருக்கிறோம்.

அதைத் தொடர்ந்து, சந்தேகம் வந்தால் தடுப்பு நடவடிக்கை. ஒருவேளை குற்றம் நடந்துவிட்டால், அதற்குப்பிறகான நடவடிக்கை மேற்கொண்டு முறையாக தண்டனை வாங்கித்தர வேண்டும் என இரண்டு விஷங்களை அரசிடம் முன்வைத்திருக்கிறோம். ஏற்கெனவே அ.தி.மு.க ஆட்சியின் லட்சணத்தைப் பார்த்துவிட்டோம். தற்போது இந்த ஆட்சியிலும் இப்படி நடப்பதுதான் கவலையாக இருக்கிறது.
சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது! - கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
திருநெல்வேலி மாவட்டத்தில் சாதிய ரீதியான வழக்குகள் 1000 பதிவாகியிருக்கிறது என எங்கள் கட்சி செயலாளர் சண்முகம் தெளிவாகப் பேசி, அப்பாவு நிலைபாட்டை ஏற்றுக்கொள்ளமாட்டோம் எனக் குறிப்பிட்டிருக்கிறார். எனவே, தி.மு.க இனி மிகவும் தீவிரமாக, சிறப்பாக செயல்பட வேண்டும். முதல்வர் ஸ்டாலினின் தொகுதி மறுவரையரை போன்ற திட்டங்களுக்கு தீவிரமாக போர் குரல் கொடுக்கும் அதேவேளை, நடந்துவரும் இந்தக் குற்றங்கள் விவகாரத்தில் இன்னும் வேகமாக செயல்பட வேண்டும்" என்றார்.

எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை ஒன்றுதிரட்டி, திமுக-வின் செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் ஒப்படைத்தோம். இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த அவர், ``கொலைகள் நடந்திருக்கிறது என்பதை மறுக்கவில்லை. இந்தக் கொலைகள் ரௌடிகளுக்கும், சமூக விரோதிகளுக்குமிடையிலானது. எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் 13 பேரை சுட்டுக் கொன்றதும், தனிமையில் வசித்தவர்கள் கொலை செய்யப்பட்டதும் சட்ட ஒழுங்கு சீர்கேடு என ஒப்புக்கொள்வாரா...
யாராக இருந்தாலும், எந்த ஆட்சியாக இருந்தாலும் யாரும் சட்டத்தைக் கையில் எடுக்கக் கூடாது. இப்போது நடந்திருக்கும் கொலைகளை நியாயப்படுத்தமுடியாது. அதே நேரம் இந்தக் கொலைகளுக்காக சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதைதான் சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் தெளிவாக கூறிவிட்டார். பெரும்பாலான கொலைகளில் தனிப்பட்ட விரோதம்தாம் காரணம்.
உ.பி, மகாராஷ்டிரா, மணிப்பூர் போன்ற மாநிலங்களில் முஸ்லிம் - இந்து, இரு சமூகப் பிரச்னைப் போல இங்கு நடக்காது. அப்படி நடந்தால் அரசுதான் நிச்சயம் பொறுப்பேற்க வேண்டும். ஒவ்வொரு கொலைக்கும் ஒரு பின்னணி இருக்கிறது. இந்தியாவின் பிரதமர் ராஜீவ் காந்தியையே காப்பாற்ற முடியாத சூழல்தான் இங்கு இருந்தது. இதற்கு காரணம் பழிவாங்கும் உணர்வு. இது இருக்கும்வரை தமிழ்நாட்டில் ஆங்காங்கே கொலைகள் நடக்கும்.

தமிழ்நாட்டில் உள்ள 8 கோடி மக்களுக்கும் 2 லட்சம் காவல்துறை அதிகாரிகள்தான் இருக்கிறார்கள். எனவே, அவர்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். நெல்லை முன்னாள் காவலர் கொலை வழக்கில்கூட, அமைச்சர் முதல் சாமானியன் வரை பாதுகாப்பு வழங்கப்படும் முன்பு, அவர்களை அச்சுறுத்தியவர்களை விசாரிப்பது வழக்கம். அதன் பிறகுதான் பாதுகாப்பை வழங்குவார்கள். அந்த விசாரணை நடந்துகொண்டிருக்கும்போதே அவர் கொலை செய்யப்பட்டுவிட்டார்.
ஆனாலும், உளவுத்துறை விரைந்து செயல்பட்டிருக்கலாம் என்பது பொதுமக்களின் எண்ணம். இனி இதுபோல் நடக்காமல் கவனம் செலுத்தப்படும் என முதல்வர் தெரிவித்திருக்கிறார். இரண்டு குழுக்கள், இனங்கள் சண்டையிடப்போகிறது என்றால் அதை உளவுத்துறையால் அனுமானிக்க முடியும். ஆனால், தனிப்பட்ட இருவரின் பகையையும், அதனால் ஏற்படும் தாக்குதல்களையும் துல்லியமாக அனுமானிக்க முடியாது. அதன்காரணமாகதான் இந்த வன்முறைகள் நடந்திருக்கலாம்.

தனிமனிதனுக்கான மிரட்டல்களும், தாக்குதலும் ஏற்புடையதல்ல. சவுக்கு சங்கருக்கு நிகழ்ந்தது கண்டிக்கத்தக்கது என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கருத்து சிறுபிள்ளைத்தனமானது. தமிழ்நாட்டின் வாக்காளர்கள் குறித்து முழுப் புரிதல் அவருக்கு இல்லை என்பதைதான் அவரின் கருத்து காட்டுகிறது. தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கருத்து என்பது, மாநில அரசின் உரிமை.
ஜகபர் அலி கொலையில், வேலூர் கொலையில், அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில், ஆள் கடத்தல் செய்தபோது எனப் பல வழக்குகளில் அதிமுக சம்பந்தப்பட்டிருந்தது. அதுபோல தி.மு.க தொண்டர்களை இப்படிப்பட்ட குற்றங்களோடு தொடர்பானவர்களாக காண்பிக்க முடியுமா? இந்த 4 ஆண்டுக்கால ஆட்சியில் ரௌடிகள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

அ.தி.மு.க ஆட்சியில் ஒரு ஆண்டுக்கு 2000 கொலைகள் நடந்தது என்றால் தி.மு.க ஆட்சியில் அதை 1,100 எனக் குறைத்திருக்கிறோம். திருநெல்வேலியில் சாதியக் கொடுமை இல்லை என அப்பாவு கூறியது அவருடைய அனுபவம், சி.பி.எம் கட்சியின் சண்முகம் கூறியது அவருடைய அனுபவம். ஆனால் தரவுகளின் அடிப்படையில் திருநெல்வேலி மாவட்டத்தில் சாதிய ரீதியிலான குற்றங்கள் குறைந்திருக்கிறது. தரவுகளை கொண்டுவந்தால் பேசலாம்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
திமுக அரசுக்கு தடுமாற்றம் இருக்கிறது!
தமிழ்நாட்டின் தற்போதைய உண்மை சூழல் என்ன என ஊடகவியலாளர் லக்ஷ்மணனிடம் கேள்வி எழுப்பியபோது, ``சட்டவிரோத செயல்கள் நடப்பதற்கும், ஆட்சியாளர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால், இப்படியான சம்பவங்கள் நடந்தற்குப் பிறகு அரசு எப்படி அதை எதிர்கொண்டு, இரும்புக் கரம்கொண்டு அடக்குகிறது என்பதின் அடிப்படையில்தான் பொதுமக்களின் பீதி கட்டுக்குள் கொண்டுவரப்படும். சட்டவிரோத சம்பவத்தில் ஈடுபட நினைக்கும் சமூக விரோதிக்கும் தார்மீக பயம் இருக்கும்.
ஆனால், இந்த ஆட்சியில் பல நல்ல விஷயங்கள் நடந்தாலும், துரதிஷ்டவசமாக ஆட்சி தொடங்கியதிலிருந்து சட்ட ஒழுங்கு விஷயத்திலும், காவல் உயர் அதிகாரிகள் நியமன விஷயத்திலும் இந்த ஆட்சி அமைந்த முதல் மாதத்தில் நடந்த தவறுகளை இன்றுவரை சரிசெய்யவே இல்லை. காவல்துறை அதிகாரிகள் நியமனம்தான் அரசின் போக்கை தீர்மானிக்கும். அதில் இந்த அரசுக்கு தடுமாற்றம் இருக்கிறது என்பது பலகட்டங்களில் தெரியவந்தது.
சரியான பொறுப்புக்கு சரியான நபரை நியமிப்பதும், தவறான நபர்களை களையெடுப்பதும் உள்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வரின் தொடர் நடவடிக்கை. இதை இந்த அரசு சரியாக செயல்படுத்தவில்லை. ஒரு உயர் காவல்துறை அதிகாரி, தனக்குக் கீழ் தன் சமூகத்தைச் சேர்ந்தவரை, தன் சாதியை, தனக்கு ஆதரவானவரை நியமிக்கிறார். தனக்கு எதிரானவர்களை, திறமையானவர்களாக இருந்தாலும், அவர்களைப் பழிவாங்குகிறார்கள் எனத் தற்போது இருக்கும் சுமார் 5 அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகள் இருக்கின்றன.

இந்தக் குற்றச்சாட்டு சரியா என விசாரித்து, அதைக் களையெடுக்க வேண்டிய நேரம் இப்போது முதல்வருக்கு வந்துவிட்டது. மரக்காணம் சாராய விவகாரம் தொடங்கி, இன்று காலை நடந்த 7 செயின் பறிப்பு புகார்கள் வரை, அதில் தி.மு.க-வுக்கு தொடர்பிருக்கிறது என்றோ, தி.மு.க பிரமுகரை முதல்வர் காப்பாற்ற முனைகிறார் என்றோ யாரும் நேரடியாக குற்றம்சாட்டவில்லை.
ஆனால், நடவடிக்கை எடுப்பதில் இருக்கும் சுணக்கம், தாமதம் இந்த அரசின் நற்பெயரைக் கெடுத்துவிடுகிறது. இப்போது காவல்துறை அதிகாரிகளை மறுசீரமைப்பு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. முதல்வர் நேரடி கவனம் செலுத்துவது மிக அவசியம். ஒருவேளை அவருடைய வேலை பளுவோ, அல்லது உடல் நலனோ ஒத்துழைக்கவில்லை என்றால், துணை முதல்வர் அந்தப் பொறுப்பை கவனிக்கலாம்.

இரும்புக் கரம் என்பது தானே சூட்டிக்கொள்ளும் பட்டம் கிடையாது. அது மக்கள் கொடுப்பது. பட்டப்பகலில் வெட்டலாம் என்னை யாரும் கேட்கமுடியாது என்ற துணிச்சலை துரதிஷ்டவசமாக இந்த அரசு கொடுத்துவிட்டது. இந்த அவமானகரமான உண்மையை வெட்கத்தைவிட்டு ஒப்புக்கொண்டு, இனியாவது மிகச் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.