பிரேசிலை வீழ்த்தி 2026 உலகக் கோப்பைக்கு தகுதிபெற்ற ஆர்ஜென்டீனா!
கணினி முன் அமர்ந்து வேலை செய்பவரா? முதுகெலும்பு பிரச்னை வராமல் தடுப்பது எப்படி?
அமர்ந்தே வேலை செய்பவரா? உடல் பருமன் கொண்டவரா? அதிக எடையை தூக்குகிறீர்களா? நீண்ட நாள்கள் முதுகின் கீழ் வலி இருக்கிறதா? அப்படியெனில் உங்களுக்கு முதுகெலும்பில் பிரச்னை இருக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.
முதுகெலும்பு அல்லது முதுகுத்தண்டு (Spine) என்பது நரம்பியல் திசுக்களாலான, மூளையிலிருந்து முதுகின் கீழ் பகுதி வரையுள்ள நீண்ட, மெல்லிய குழாய் அமைப்பு. இது உடலைத் தாங்கும், உடலுக்கு ஒரு வடிவத்தைக் கொடுக்கும், உடல் இயக்கத்திற்கு உதவும் முக்கிய அமைப்பு.
இந்த முதுகெலும்பு அல்லது முதுகுத்தண்டில் பிரச்னை என்பது இந்தியாவில் 60% பேருக்கு இருப்பதாகவும் 'பேக் பெயின்' முதுகின் கீழ் ஏற்படும் வலி 48% பேருக்கு இருப்பதாகவும் கூறுகிறார் வர்த்தமான மகாவீரர் மருத்துவக் கல்லூரி இயக்குநர் டாக்டர் தீபக் ஜோஷி.
உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி 2020 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் 61.9 கோடி பேர் 'பேக் பெயின்' என்று கீழ் முதுகு வலியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவே 2050 ஆம் ஆண்டு மக்கள்தொகை பெருக்கம் மற்றும் வயது முதிர்வு காரணமாக, பாதிப்பு எண்ணிக்கை 84.3 கோடியாக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் உடல் செயல்பாடு இல்லாததற்கு காரணமாக இருப்பது இந்த கீழ் முதுகு வலி. இது எந்த வயதிலும் ஏற்படலாம். உலகம் முழுவதும் பெரும்பாலாக அனைவரும் ஒரு முறையாவது இந்த வலியை அனுபவிக்கின்றனர் என்கின்றன தரவுகள்.
அமர்ந்தே இருக்கும் வாழ்க்கை முறை, நேராக நிமிர்ந்து அமராதிருத்தல், வயது முதிர்வு, உடல் பருமன் போன்றவை இதற்கு காரணங்களாக இருக்கின்றன. மேலும் பெண்கள், கிராமப்புற மக்கள், உடலுழைப்புத் தொழிலாளர்கள் மத்தியில் அதிக பாதிப்பு இருக்கிறது.
இந்திய முதுகெலும்பு காயங்கள் மையத்தின் (ISIC) இயக்குநரும் தலைவருமான டாக்டர் விகாஸ் தாண்டன் இதுபற்றி கூறுகையில்,
"முதுகெலும்பின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிப்பது மிகவும் அவசியம். ஏனெனில் ஒட்டுமொத்த உடல்நலத்தில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. உங்களுடைய உடல் இயக்கத்திற்கு பெரிதும் உதவுகிறது. உடலில் பிற உறுப்புகளுக்கு கட்டளையிடும் தண்டுவடத்தைப் பாதுகாக்கிறது.
முதுகெலும்பு உங்களை நிமிர்ந்து இருக்கச் செய்யும் ஒரு அமைப்பு மட்டுமல்ல. இது உங்களுடைய இயக்கம் மற்றும் ஒட்டுமொத்த செயல்பாட்டிற்கான அடித்தளமாகும்" என்றார்.
முதுகெலும்பு ஆரோக்கியம் ஏன் முக்கியம்?
தில்லி ஆகாஷ் ஹெல்த்கேர் எலும்பியல் மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை துறை இயக்குநர் டாக்டர் ஆஷிஷ் சௌத்ரி கூறுகையில்,
"உடலின் மைய அச்சு முதுகெலும்பு. இது நீங்கள் நிலையாக நிற்பதற்கும் கீழே குனிவதற்கும் தேவைக்கு தகுந்தவாறு உடலை வளைப்பதற்கும் உதவுகிறது. ஏன், விளையாடுவதற்கு, தீவிரமாக உடற்பயிற்சி செய்வதற்கு எல்லாம் முடிகிறது என்றால் அதற்குக் காரணம் முதுகுத்தண்டுவடம்தான்.
நீண்ட நேரம் வேலை செய்வது, அதிக நேரம் மொபைல் சாதனங்களைப் பார்ப்பதும் முதுகெலும்பு பிரச்னைகளுக்குக் காரணமாகும்" என்றார்.
ஏனெனில் அலுவலகத்தில் வேலை செய்பவர்கள், ஐடி ஊழியர்கள், முதியவர்கள், உடலுழைப்புத் தொழிலாளர்கள் ஆகியோரிடையே இந்த பிரச்னை அதிகம் காணப்படுகிறது. ஏனெனில் இவர்கள் நீண்ட நேரம் கணினியின் முன் அமர்ந்திருப்பவர்கள், அதிக எடை தூக்குபவர்கள், உடல் இயக்கம் குறைவாகக் கொண்டிருப்பவர்கள். இவர்களுக்கு முதுகெலும்பு தொடர்பான பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தில்லி பிஎஸ்ஆர்ஐ மருத்துவனையின் டாக்டர் துருவ் சதுர்வேதி கூறுகையில், "இப்போது இளைஞர்களுக்கும் அதிகமாக முதுகெலும்பு தொடர்பான பிரச்னைகள் ஏற்படுகின்றன. காரணம், உடற்பயிற்சிக் கூடங்களுக்குச் செல்லும் இளைஞர்கள் எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையுமின்றி தகுதிக்கு மீறி அளவுக்கு அதிகமாக எடையைத் தூக்குகின்றனர், அதிக எடையுடன் ஸ்குவாட் போன்ற உடற்பயிற்சிகளைச் செய்கின்றனர்.
அதேபோல வேலை செய்யும் இடத்தில் உட்காரும்போது நிமிர்ந்து உட்காரதிருத்தலும் இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அடுத்து மோசமான சாலைகளில் பயணிப்பதாலும் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது.
நீரழிவு நோய், உடல் பருமன் இருப்பவர்கள் மறைமுகமாக முதுகெலும்பு தொடர்பான பிரச்னைகளினால் பாதிக்கப்படுகின்றனர். 15-17 வயத்துக்குள்பட்ட குழந்தைகள் அதிக நேரம் மொபைல், டிவி பார்ப்பதால் அதிகமாக இதனால் பாதிக்கப்படுகின்றனர். அதனால் குழந்தைகள் உள்பட அனைவருக்கும் உடல் இயக்கம் என்பது அவசியமானது. உட்கார்ந்து வேலை செய்பவர்கள் நிமிர்ந்து உட்கார வேண்டும்" என்று அறிவுறுத்துகிறார்.
கீழ் முதுகு வலி, முதுகெலும்பு டிஸ்க்குகள் நகர்வது, ஸ்பான்டிலிடிஸ், சியாட்டிகா, ஆஸ்டியோபோரோசிஸ், ஸ்பைனல் ஸ்டெனோசிஸ் ஆகியவை மிகவும் பொதுவான முதுகெலும்பு பிரச்னைகள். முதுகுத் தண்டு காயங்கள், முதுகெலும்பு சிதைவது போன்ற பிரச்னைகளும் ஏற்படுகின்றன.
சாலை விபத்து மற்றும் விளையாட்டின்போது முதுகெலும்பு உடைவதால் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ முடக்குவாதம்(paralysis) ஏற்படுகிறது.
சிகிச்சை முறைகள்
நோயெதிர்ப்பு மருந்துகள், பிசியோதெரபி, தசைகளுக்கு வலுவூட்டும் உடற்பயிற்சிகள், ஸ்டெராய்டு ஊசிகள், அறுவை சிகிச்சை என இதற்கு பல சிகிச்சை முறைகள் உள்ளன.
வாழ்க்கை முறை மாற்றம், மருந்துகள் மற்றும் பிசியோதெரபி மூலமாக முதுகெலும்பு தொடர்பான சாதாரண பிரச்னைகளை சரிசெய்து விடலாம். முதல் 6-8 வாரங்களுக்கு இதனை முயற்சி செய்தபின்னர் அறுவை சிகிச்சை குறித்து முடிவு எடுக்கப்படும். அதேபோல சிகிச்சையில் சிடி ஸ்கேன் மிகவும் முக்கியம். அறிகுறிகளை பொருத்து அறுவை சிகிச்சை செய்யப்படும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அதேபோல இந்தியாவில் முதுகெலும்பு தொடர்பான அறுவை சிகிச்சைகளில் 80-95% வெற்றி அடைவதாகவும் ரோபோடிக் அறுவை சிகிச்சை போன்ற நவீன அறுவை சிகிச்சைகள் பல வந்துவிட்டதாக டாக்டர் ரகுராம் கூறுகிறார்.
வராமல் தடுப்பது எப்படி?
முதுகெலும்பு ஆரோக்கியத்திற்கு தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும். குறிப்பாக முதுகில் உள்ள தசைகளின் வலுவிற்கு பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
உட்காரும்போது நிமிர்ந்து உட்கார வேண்டும். ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமரக் கூடாது.
ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை இருக்கையைவிட்டு எழுந்திருக்க வேண்டும். எழுந்திருப்பது மட்டுமின்றி உடலை வளைத்துக்கொடுக்க வேண்டும்.
அலுவலங்களில் முதுகு நேராக இருக்கும்வகையிலான நாற்காலிகளைப் பயன்படுத்தலாம்.
நேரடியாக வேகமாக முன்னோக்கி குனியக்கூடாது.
தகுதிக்கு மீறி அதிக எடை கொண்ட பொருள்களை தூக்கக் கூடாது.
அப்படி எடை கொண்ட பொருள்களை தூக்குகினால் முதுகுக்கு அழுத்தம் கொடுக்காமல் கால்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
முதுகுத் தண்டு வளைவதை உறுதிசெய்துகொள்ள வேண்டும்.
உடல் பருமன் வராமல் தவிர்க்க வேண்டும், உடல் எடையை சரியாக வைத்திருக்க வேண்டும்.
புகைபிடிக்கும் பழக்கத்தைத் தவிர்க்க வேண்டும்.
உடலில் சிறிது நேரம் சூரிய ஒளி படும்படி இருக்க வேண்டும்.
கர்ப்பிணிகள், தாய்மார்கள், மெனோபாஸ் அடைந்த பெண்கள் வைட்டமின் டி3, கால்சியம் போன்ற வைட்டமின்களை எடுத்திருக்க வேண்டும்.
அறிகுறிகள்
முதுகின் கீழ் வலி,
கழுத்துப் பகுதி கடினமாதல்
உணர்வின்மை அல்லது மரத்துப் போதல்
கூச்ச உணர்வு
தசையின் வலு குறைதல்
நடப்பதில்
சிரமம்
நெகிழ்வுத்தன்மை குறைதல்
குத்துவது போன்ற வலி
சமநிலை இழப்பு
நாள்பட்ட சோர்வு