குழந்தைகளின் மன அழுத்தம், பாலியல் துன்புறுத்தல்... பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன? - மருத்துவர் பதில்!
- டாக்டர் அபிலாஷா
இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளிடம் பதட்டம் ஒருபக்கம், பள்ளி, பெற்றோர்கள், சமூகம் தருகின்ற அழுத்தங்கள் எல்லாம் ஒருபுறம் இருக்கிறது.
பொதுத்தேர்வு என்று வந்தாலே எப்போதுமே நன்றாகப் படிக்கின்ற குழந்தைகள்கூட நாம் பெயில் ஆகிவிடுவோமோ, நாம் எதிர்பார்க்கும் மதிப்பெண்கள் வருமோ என்று ஒரு பயத்திலேயேதான் தேர்வை எதிர்கொள்கிறார்கள்.
இந்த அழுத்தம் ஏன் இவர்கள் மீது வைக்கப்படுகிறது என்றால், பெற்றோர்கள் அதுதொடர்பான அடுத்தடுத்த விஷயங்கள் குறித்துப் பேசுகிறார்கள். 'தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தால்தான் நல்ல கல்லூரியில் படிக்க முடியும், நல்ல கல்லூரியில் படித்தால்தான் நல்ல வேலை கிடைக்கும்' என்று கூறுகிறார்கள்.
ஆனால் உண்மை என்னவெனில், அப்படி எதுவுமே இல்லை. பொதுத்தேர்வு என்பது நீங்கள் எவ்வளவு படித்திருக்கிறீர்களோ அதை தேர்வில் எழுதுகிறீர்கள்.. உங்களுடைய கட்-ஆப் மதிப்பெண் வைத்து நீங்கள் கேட்கும் கல்லூரிக்குச் செல்கிறீர்கள். அவ்வளவுதானே தவிர உங்கள் வாழ்க்கையே நிர்ணயிக்கப்போவது இதுதான் என்று சொல்ல முடியாது.
ஏனென்றால் நல்ல மதிப்பெண் பெற்று எதிர்காலத்தில் தவறாகப் போனவர்களுக்கும் இருக்கத்தான் செய்கிறார்கள். மதிப்பெண் குறைவாகப் பெற்று அதனால் ஜெயித்துக் காட்ட வேண்டும் என்ற வைராக்கியத்தில் வெற்றி பெற்றவர்களும் இருக்கிறார்கள். அதனால் இந்த அழுத்தம் என்பது சமூகம் கொடுப்பதுதான். இது இப்போது மட்டுமல்ல, காலம் காலமாக இருப்பதுதான்.
இதை நான் இரண்டாகப் பார்க்கிறேன். கரோனாவுக்கு முன், கரோனாவுக்குப் பின். இதில் கரோனாவுக்குப் பின் பொதுத் தேர்வுகள் எல்லாம் ரத்து செய்யப்பட்டு ஆல்-பாஸ் என்று சொன்னார்கள். ஆனால், அவர்கள் எல்லாம் இப்போது முறையாக தேர்வு எழுதப் போகிறார்கள்.
அவர்களைப் பொருத்தவரை பொதுத்தேர்வு என்பது முக்கியத்துவம் குறைந்து தற்போது மீண்டும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்போது அவர்களுக்கு அந்த பயமும் அதிகமாகிறது. அவர்களின் பயமே பெற்றோரைப் பார்த்துதான். அவர்களுக்கு நாம் என்ன பதில் சொல்லப் போகிறோம் என்பதுதான்.
அடுத்து ஒரு குழுவில் 4 நண்பர்கள இருந்தால் நால்வரும் ஒரே அளவில் மதிப்பெண் பெற வேண்டுமே என்ற பயம். சில நன்றாகக் படிக்கக்கூடியவர்கள்கூட தங்கள் நண்பர்கள் குறைவாக மதிப்பெண் வாங்குகிறார்கள் என்று தங்களை குறைத்துக்கொள்வார்கள்.
அடுத்து உறவினர்களும் மதிப்பெண்கள் குறித்து கேள்வி கேட்க ஆரம்பித்துவிடுவார்கள். இப்படி எல்லாம் சேர்ந்து குழந்தைகளுக்கு அழுத்தம் தரப்படுகிறது. பொதுத்தேர்வில் மதிப்பெண்கள் வாங்கினால்தான் நமக்கு மதிப்பு என்று குழந்தைகளை நினைக்க வைத்துவிடுகிறோம். ஆனால் அது உண்மையில்லை.
ஏனெனில் குழந்தைகளுக்கு அழுத்தத்தைக் குறைத்தால் அவர்களது படிப்பு இன்னும் நன்றாக இருக்கும், அதிக மதிப்பெண் பெறுவார்கள்.
ஒரு செயலைச் செய்வதில் பயம் இருந்தால் நன்றாகச் செய்யும் வேலையைக்கூட செய்ய முடியாது. அந்த பயம் குறைந்தாலே செயல்திறன் அதிகரித்து விடும்.
இதையும் படிக்க | தைராய்டு பிரச்னையா! இதைச் சாப்பிடுங்கள்!!
ஏடிஹெச்டி குறைபாடு
ஏடிஹெச்டி என்பது ஒரு வளர்சிதை குறைபாடு. 3-4 வயது குழந்தைகளில் சிலரைப் பார்த்தால் துறுதுறுவென்று இருப்பார்கள். ஒரு இடத்தில் இருக்கமாட்டார்கள், ஓடிக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் சோர்வானாலும் ஓடிக்கொண்டே இருப்பார்கள். இது மிகை இயக்கம் எனலாம்.
மற்றொன்று கவனக்குறைவு. ஒரு விஷயத்தில் கவனம் செலுத்த முடியாது. நிறைய குழந்தைகளுக்கு பதின் வயது தொடங்கும்போது அது இயல்பாகவே சரியாகிவிடும். ஒரு சிலருக்கு மட்டுமே அது அதற்கு மேலும் தொடரும். இது ஒரு பெரிய பிரச்னை கிடையாது. இவர்கள் சிந்தனைகள், நடந்துகொள்ளும்விதம், பிரச்னையை எடுத்துக்கொள்ளும் விதம் எல்லாமே வித்தியாசமாக இருக்கும். அதேநேரத்தில் அவர்கள் நம்மைவிட மேலாக சிந்திப்பார்கள். அவர்களின் சிந்தனையில் படைப்புத்திறன் அதிகமாக இருக்கும். ஒரு பிரச்னையை சரிசெய்யும் திறன் இருக்கும், செயலை முழுமையாக சரியாக செய்யும் திறமை இருக்கும். இப்படி நிறைய நல்ல விஷயங்கள் இருக்கும்.
கெட்டது என்று பார்த்தால் ஒரு விஷயத்தின் மீது கவனம் செலுத்த முடியாது. ஒரேநேரத்தில் நிறைய விஷயம் செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். குறிப்பிட்ட வயது ஆகும்போது அது இயல்பாகவே சரியாகிவிடும். மிகை இயக்கம் இல்லாமல் கவனக்குறைவு மட்டும்கூட சிலருக்கு இருக்கிறது.
இதெல்லாம் அந்த காலத்தில் இருந்ததுதான். டிஸ்லெக்சியா எனும் தலைகீழாக எழுதுவது எல்லாம் முன்பே இருக்கும் ஒன்றுதான். எனவே, ஏடிஹெச்டி உள்ளிட்ட குறைபாடு உள்ளவர்களுக்கு உளவியல் சிகிச்சை மூலமாக அதனை சரிசெய்ய முடியும்.
உதாரணமாக இதுபோன்ற குழந்தைகளுக்கு ஒருவர் தனியாக அமர்ந்து படிக்க சொல்லித்தர வேண்டும். பொறுமையாக சொல்லிக்கொடுக்க வேண்டும்.
இதையும் படிக்க | ஃபகத் ஃபாசில், ஆலியா பட்... இன்னும் பலர்! ஏடிஎச்டி என்பது என்ன? காரணங்களும் தீர்வுகளும்!
குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல்
பாலியல் வன்கொடுமையோ பாலியல் வன்முறையோ குழந்தைகளுக்கு இப்போதெல்லாம் தெரிகிறது. சமீபமாக நாம் ஏற்படுத்தும் விழிப்புணர்வு இதற்கு காரணமாக இருக்கலாம்.
குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை என்று நடந்தால் அதற்கு காரணமானவர்கள் பெரும்பாலும் அந்த குழந்தைக்கு நன்கு பரிட்சயமானவர்கள்தான். தினமும் பார்க்கிற ஒருவரால்தான் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். ஒரு சில குழந்தைகளுக்குதான் தெரியாதவர்கள் மூலமாக நடக்கிறது.
குழந்தைகளுக்கு என்ன குழப்பம் என்றால், நன்றாகத் தெரிந்தவர்கள் இவ்வாறு பாலியல் துன்புறுத்தல் செய்யும்போது இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? என்பதுதான்.
நம் வீட்டில் உள்ளவர்களுக்கு தெரிந்த ஒருவர் தவறு செய்கிறார், அவர் நமக்கு நிறைய செய்திருக்கிறார், இது தவறுதானா? என்று குழப்பமடைவார்கள்.
அடுத்து குழந்தைகள் இதுபற்றி சொன்னாலும் சில பெற்றோர்களிடம் அதை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. அப்படி பெற்றோர்கள் செய்யும்போது குழந்தைகள் நம்பிக்கை இழக்கிறார்கள். நிறைய பெற்றோர்கள் செய்யும் தவறு இது.
அடுத்து பேட்-டச் எனும் தவறான தொடுதல் பற்றிய தவறான புரிதல். அதாவது 'யாரும் தொட்டாலே நீ கத்திவிடு' என்று சில பெற்றோர்கள் குழந்தைகளுக்கு தவறாக சொல்லித்தருவது.
அதனால் குழந்தைகளுக்கு ஒரு சில முக்கிய விஷயங்களை சொல்லிக்கொடுத்தால் போதுமானது.
ஒரு பிரச்னை வந்தால் என்ன செய்ய வேண்டும்? யாரிடம் சொல்ல வேண்டும்? அந்த பிரச்னையை நீ எப்படி கையாள வேண்டும்? என்பது.
இந்த விஷயத்தில் பெற்றோர்களைவிட பள்ளிகளுக்கு அதிக பொறுப்பு இருக்கிறது. ஏனெனில் இன்றைய குழந்தைகள் வெளிப்படையாக அனைத்தையும் சொல்கிறார்கள்.
பள்ளிகளில் குழந்தைகள், ஒரு ஆசிரியர் பற்றி இன்னொரு ஆசிரியரிடம் சொல்லப் பயப்படுகிறார்கள். பக்கத்து வீட்டில் உள்ளவர்களைப் பற்றி பேச பயப்படுகிறார்கள்.. ஆனால் தெரியாத எங்களைப் போன்ற ஒருவரிடம் வெளிப்படையாக அனைத்து விஷயங்களையும் கூறுகிறார்கள்.
'உன் உடல் உன் உரிமை' என்று கூறி குழந்தைகள் தங்கள் பிரச்னையை வெளிப்படையாக சொல்ல வைக்க வேண்டும். மாறாக குழந்தைகளை பயமுறுத்த வேண்டாம். ஏனெனில் பயமுறுத்தினால் குழந்தைகள் அனைவரிடமும் இடைவெளியை பின்பற்ற ஆரம்பித்துவிடுகிறார்கள். அது குழந்தைகளின் நம்பிக்கையையே அழித்துவிடும். எதிர்காலத்தில் அது அவர்களுக்கு ஒரு பெரிய பிரச்னையாக மாறிவிடும். அதனால் குழந்தைகளை பயமுறுத்தாமல் பிரச்னையை வெளிப்படுத்தவும் கையாளவும் அவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.
(கட்டுரையாளர் - உளவியல் நிபுணர்)